சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் தனி முகாமில் உள்ள பலர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அதில், “நாங்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் எங்களின் மூதாதையர்கள் பிழைப்புக்காக இலங்கையிலுள்ள தேயிலை தோட்டங்களுக்கு கூலி தொழிலாளர்களாக சென்றனர்.
அங்கு நடக்கும் பிரச்னையில் உயிருக்கு பயந்து மீண்டும் தமிழ்நாடு திரும்பினோம். உரிய பயண ஆவணங்களின்றி சட்டவிரோதமாக வந்ததால் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டோம்.
எங்களை அகதிகளாக கருதாமல், தாயகம் திரும்பியவர்களாகக் கருதி இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தனர்.
மனுவை விசாரித்த தனி நீதிபதி, “மனுதாரர்கள் தங்களுக்கு இந்திய குடியுரிமை கேட்டு புதிதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆட்சியர்கள் இந்த விண்ணப்பங்களை தாமதமின்றி ஒன்றிய அரசின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒன்றிய அரசு அந்த விண்ணப்பங்கள் மீது 16 வாரங்களுக்குள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தொழில்நுட்ப காரணங்களைக் கூறி நிராகரிக்க நினைக்கக்கூடாது” என உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஒன்றிய அரசு சார்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று(ஜூலை 30) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஒன்றிய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள். இவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், ஒன்றிய அரசு மனுவை பரிசீலனை செய்து ஒன்று அவர்களுக்கு குடியுரிமை வழங்கலாம் அல்லது மனுவை நிராகரிக்கலாம். அதைவிடுத்து ஏன் மேல்முறையீடு செய்யப்பட்டது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து தமிழ்நாடு அரசு, எதிர்மனுதாரர்கள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிக்கலாமே: உள்நோக்கத்துடன் போடப்படும் பொது நல மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல - நீதிபதிகள் கருத்து!