மதுரை : தனது அண்ணனை கொலை செய்தவர்களை பழிவாங்க காத்திருந்த தம்பி மற்றும் அவரது நண்பரை படுகொலை செய்த அடையாளம் தெரியாத கும்பல் குறித்து காவலர்கள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
மதுரை மாநகர் மதிச்சியம் அருகேயுள்ள ராமராயர் மண்டபம் பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி மற்றும் அவரது நண்பர் வேலு ஆகிய இருவரும் திண்டியூர் காளிகாப்பான் அருகே நின்றுகொண்டிருந்துபோது திடீரென அங்கு வந்த 10க்கும் மேற்பட்டோர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் தாங்கள் வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
இதனால் படுகாயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரும் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒத்தக்கடை காவல்துறையினர் உடலை மீட்டு கைரேகை நிபுணர்கள் மூலமாக தடயங்களை சேகரித்து விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கொலையுண்ட செல்லப்பாண்டியின் அண்ணன் கார்த்திக் கடந்த 2016ஆம் ஆண்டு அரசு மருத்துவகல்லூரி அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் கார்த்திக்கின் சகோதரர் செல்லப்பாண்டி கொலை செய்தவர்களை பழிவாங்க திட்டமிட்டிருந்த நிலையில் அதனை அறிந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரைக் கொலை செய்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. இந்த இரட்டை கொலை சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையும் படிங்க : இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் கொலை - 5 பேர் கைது