மதுரை: உசிலம்பட்டி தொகுதி அமமுக வேட்பாளர் மகேந்திரனுக்கு ஆதரவாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். உசிலம்பட்டியில் முத்துராமலிங்க தேவர் சிலையின் முன்பாக நடைபெற்ற பரப்புரையில் பேசிய அவர்,
"தாயாரை இழிவுப்படுத்தி பேசியதற்காக கண்ணீர் வடித்த எடப்பாடி பழனிசாமி, அவரை முதலமைச்சர் பதவியில் உட்கார வைத்துவிட்டு ஜெயிலுக்கு போன சசிகலாவை நினைத்து எப்போதாவது அழுதிருப்பாரா? அவர் எப்படி முதலமைச்சர் பதவிக்கு போனார்? பாம்பு, பல்லி மாதிரி ஊர்ந்து போனாரா என்பதை விட அவர் பச்சோந்தி என்பதுதான் உண்மை" என்று விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருந்தது. இலங்கையில் ஈழத்தமிழர் படுகொலை சம்பவம் நடைபெற்றது. கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறி சென்னையில் மெரினா கடற்கரையில் படுத்துக் கிடந்தார். கருணாநிதிதான் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட்டவர்.
திமுக ஆட்சியில் இரவு நேரங்களில் கடைகளை திறந்தது வைக்கமுடியாது. திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடுவார்கள். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகம் இருந்தது. ஆகையால் அமமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து அரியணையில் அமர்த்த வேண்டும்" என்று தெரிவித்தார்.