மதுரை: கே.கே. நகர்ப் பகுதியில் புதிதாகத் தொடங்கப்பட்ட இயற்கை மருத்துவமனையைத் தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,
"எய்ம்ஸ் மருத்துவமனையில் இயற்கை மருத்துவத்திற்கான பிரிவைச் சேர்க்க வேண்டும். இந்திய அரசு இயற்கை மருத்துவத்திற்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை, உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இயற்கை மருத்துவர்களுக்கான வாரியத்தை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும்.
இதனை கவனத்திற்கு எடுத்துச் செல்வோம், அலோபதி, இந்திய மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கும் நிலையில் இயற்கை மருத்துவம் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.
இதனால் இயற்கை மருத்துவம் படிக்கத் தயங்குகின்றனர், அதிக கல்லூரிகள், வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் இயற்கை மருத்துவத்திற்கான பிரிவுகளை அனுமதிக்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் இயற்கை மருத்துவத்திற்கான பிரிவைச் சேர்க்க வேண்டும். இயற்கை மருத்துவம் குறித்து போதிய விழிப்புணர்வு அளித்தால் அறுவை சிகிச்சையில் குறைய வாய்ப்பு.
அரசியல் சக்தியாக மாறிய விசிக
உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி, ஒன்பது மாவட்டங்கள் என்றாலும் இந்த முடிவுகள் ஒவ்வொரு கட்சியின் பலத்தைக் காட்டியுள்ளது, அதிமுக சரிவைச் சந்தித்துள்ளது, நான்கு மாத நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்று இந்த வெற்றி. அரசியல் சக்தியாக விசிகவை பொதுமக்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதை விசிகவின் வெற்றி நிரூபித்துள்ளது.
மக்களுக்கு நன்றி, விசிகவின் நீண்ட நாள் கோரிக்கையான மாநில அளவிலான எஸ்.சி.எஸ்.டி. ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதற்குத் தமிழ்நாடு அரசிற்கு நன்றி.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய பணியாளர்கள் ஊதிய உயர்வு கோரி தொடர்ந்து போராடிவருகிறார்கள். இது குறித்து முதலமைச்சரைச் சந்தித்துப் பேசியுள்ளேன், தமிழ்நாடு அரசு தொகுப்பூதியப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், ஒன்றிய அரசின் திட்டங்களைக் கண்காணிக்கும் குழுவில் நான் இடம்பெற்றுள்ளேன், மாநில வளர்ச்சி கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளேன்.
நாம் தமிழர் கட்சி அரசியல் சனாதனவாதிகளுக்கு துணைபோகிறது
சமூகநீதி அரசியலைப் பேசும் மண்ணில் சனாதன சக்திகளுக்குத் துணைபோகும் வகையில் அரசியலை கையில் எடுக்க வேண்டாம் என நான் ஏற்கனவே சீமானுக்கு சுட்டிக் காட்டியுள்ளேன். மதம் என்பது வேறு ஆன்மிகம் என்பது வேறு, மதம் என்பது நிறுவனம் ஆன்மிகம் என்பது உணர்வு, எதிர்பாராதவகையில் நாம் தமிழர் கட்சி அரசியல் சனாதனவாதிகளுக்குத் துணைபோகிறது, உலகளாவிய மதமாக கிறிஸ்தவமும், இஸ்லாமியமும் உருவாகியுள்ளன.
இந்து மதம் உலக மதமாக மாறவில்லை ஏன் என இந்து மதம் சார்ந்த தலைவர்கள் சிந்திக்க வேண்டும், ஆசியா கண்டத்தில்கூட இந்து மதத்தைப் பின்பற்றும் நாடு இல்லை, அரசியல் மனிதநேயம், சாதியின் பெயரால் பிரிவுகள் கொண்ட மதமாக இந்து மதம் உள்ளதால் உலக நாடுகள் ஏற்கவில்லை.
’ஆர்எஸ்எஸ்காரர்கள் சீமான் எங்களுக்கானவர்’ என்று கூறுவதுபோல சீமானின் செயல்பாடு மாறிவிட்டது, மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவது ஜனநாயகம், நாட்டிற்குப் பாதுகாப்பு இல்லை. இந்திய விமானம் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ஆகியவை தனியார்மயமாகி-வருகிறது.
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டை எவ்வாறு காப்பாற்றுவது என்ற அச்சம் உருவாகியுள்ளது. 2024இல் பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும், சசிகலா அரசியல் வருகை என்பது அவரது தனிப்பட்ட உரிமை, அவரது விருப்பம் அது குறித்து கருத்துச் சொல்ல எதுவுமில்லை" என்றார்.
இதையும் படிங்க:தங்கம் விலை ரூ. 400 குறைவு; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!