மதுரை: திருச்செந்தூர் பாலக்காடு ரயில் நிலையங்களுக்கு இடையே நாளைமுதல் முன்பதிவு இல்லாத ரயில் இயக்கப்படவுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"திருச்செந்தூர் - பாலக்காடு ரயில் நிலையங்களுக்கு இடையே டிசம்பர் 16ஆம் தேதியிலிலும் பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே டிசம்பர் 17ஆம் தேதியிலும் ஒரு முன்பதிவு இல்லாத விரைவு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடுசெய்துள்ளது.
அதன்படி வண்டி எண் 16732 திருச்செந்தூர் - பாலக்காடு முன்பதிவில்லாத விரைவு ரயில் டிசம்பர் 16ஆம் தேதிமுதல் திருச்செந்தூரிலிருந்து மதியம் 12.05 மணிக்குப் புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு பாலக்காடு சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் வண்டி எண் 16731 பாலக்காடு - திருச்செந்தூர் முன்பதிவில்லாத விரைவு ரயில் டிசம்பர் 17ஆம் தேதிமுதல் பாலக்காட்டிலிருந்து அதிகாலை 4.55 மணிக்குப் புறப்பட்டு மாலை 3.45 மணிக்கு திருச்செந்தூர் வந்துசேரும்.
இந்த ரயில்கள் பாலக்காடு டவுன், புதுநகரம், கொல்லங்கோடு, முதலமடா, மீனாட்சிபுரம், பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, கடம்பூர், வாஞ்சி மணியாச்சி, தாழையூத்து திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஆழ்வார்திருநகரி, நாசரேத் கச்சினாவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுசெல்லும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்பத்தூரில் ரயில் மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு