திருமணத்திற்கு பிறகும் தங்களது நண்பனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என மணமகனின் நண்பர்கள் மணமகளிடம் பத்திரத்தில் கையொப்பம் வாங்கி ஒப்பந்தமிட்டது பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.தேனியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருபவர் ஹரிபிரசாத்.
இவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கீழப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர். கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் திறமை வாய்ந்த வீரர் ஆவார். தனது பகுதியில் உள்ள கிரிக்கெட் அணி ஒன்றுக்கு இவரே கேப்டனும் ஆவார்.
இந்நிலையில் ஹரிபிரசாத்துக்கும் தேனியைச் சேர்ந்த பூஜா என்பவருக்கும் உசிலம்பட்டியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பெரியோர்கள் முன்னிலையில் நேற்று (செப்.9) திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தின் போது ஹரிபிரசாத்தின் சக கிரிக்கெட் நண்பர்கள் கையில் ஒரு ஒப்பந்த பத்திரத்துடன் மணப்பெண்ணிடம் திருமணத்திற்கு பிறகும் தங்களது நண்பன் ஹரி பிரசாத்தை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் எனவும்,
வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மணமகன் கிரிக்கெட் விளையாட மணமகள் சம்மதம் தெரிவிப்பது போன்றும் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட வைத்து திருமண விழாவையே அதிர வைத்தனர். திருமண விழாவில் நடைபெற்ற இந்த ஒப்பந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் - எரிச்சலடைந்த ரித்திக் ரோஷன்