மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த விளச்சேரியில் செயல்படாமல் உள்ள பிரசவ மருத்துவமனையை புதுப்பித்து மீண்டும் பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பாக, விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூர் எம்.பி., கூறுகையில், "தற்போது தனியார் மருத்துவமனைக்கு செல்ல பொது மக்கள் ஆர்வம் காட்டி வருவதால், கேட்பாரற்று கிடக்கும் அரசு மருத்துவமனைகளை மீண்டும் புதுப்பிப்பது குறித்து அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்படும்.
மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வந்த பிறகும் கூட நோட்டாவுடன் போட்டி போடும் கட்சியாகவே பாஜக இருக்கும். குறிப்பாக, 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு வந்த அமித்ஷாவால், 2019 தேர்தலில் பாஜகவுக்கு இருந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் இழக்க நேரிட்டது. தற்போதும் அதே நிலைதான் ஏற்படும். அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் திமுக ஏற்கும் என ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது" என்றார்.