மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், "தமிழ்நாட்டில் கொள்ளை, வழிப்பறி, நகை பறிப்பு, கட்டப்பஞ்சாயத்து, சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. கூலிப்படை மூலம் கொலைசெய்கின்றனர். காவல் துறையினர் உரிய நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்வதில்லை.
இதனால் அச்சமின்றி மேலும் குற்றங்களில் ரவுடிகள் ஈடுபடுகின்றனர். ரவுடிகள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்தால், குற்றம் குறையும். ரவுடிகள் மீதான வழக்குகளை விசாரிக்க மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். குற்றப்பத்திரிகையை 30 நாள்களில் தாக்கல்செய்ய வேண்டும். ரவுடிகள், சமூக விரோதிகளுடன் நெருக்கமாக உள்ள காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி அமர்வு முன்பு இன்று (டிச. 08) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வழக்கு சம்பந்தமான முழுமையான ஆவணங்களை நீதிமன்றதில் தாக்கல்செய்தால் வழக்கு விசாரிக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதிகள், தொடர்ந்து மனுதாரர் அனுப்பிய கோரிக்கை குறித்து தமிழ்நாடு உள் துறைச் செயலர் பரிசீலனை செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.