ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜனவரி 2ஆம் தேதி மாணிக்கவாசகர் உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளும், ஆருத்ரா தரிசனமான இன்று திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் உள்ள பாறைகளால் செதுக்கப்பட்ட நடராஜர் சிலைக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரங்களும் செய்யப்பட்டன.
அதைத் தொடர்ந்து உற்சவ நடராஜர் சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல், புதுச்சேரியில் பிரசித்திப்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோ பூஜையும், அதனைத் தொடர்ந்து கோயிலில் சந்தனக்காப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நடராஜர், சிவகாமி அம்பாள் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அப்போது சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பின்னர் நடராஜர், சிவகாமி அம்பாள் சுவாமிகள் நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்தனர். அப்போது கோயிலில் கூடியிருந்த திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க:திருவொற்றியூர் ஸ்ரீதியாகராஜ திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம்