மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, "இன்றைக்கு நான் அரசியல்வாதியாக இல்லாமல் ஆளுநராக வந்துள்ளேன். அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம், என்னால் பதில் சொல்ல முடியாது. இன்று மகாத்மா காந்தியின் நினைவுநாள், அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு நான் இங்கு வந்திருக்கிறேன்.
எல்லாவற்றையும்விட சிறப்பு இங்கு எதிர்பாராதவிதமாக விமான நிலையத்தில் நான் வந்தபொழுது தமிழ்நாடு முதலமைச்சர் இங்கே வருகிறார்கள் என்று கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தேன்.
இன்று மதுரைக்கு வந்துதிருப்பதன் நோக்கம் மதுரை வழியாக பழனி மலை சுப்பிரமணிய சுவாமியைப் பார்க்க பழனிக்குப் போகிறேன். கடவுள் பழனிசாமியைப் பார்ப்பதற்கு மதுரை வந்தடைந்தபோது முதலமைச்சர் பழனிசாமியைப் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
தைப்பூச விழாவிற்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டுமென நீண்டநாள் கோரிக்கைவைக்கப்பட்டிருந்தது. இறைவன் பழனிசாமியின் தைப்பூசத்திற்கு விடுமுறை கொடுத்ததற்காக முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி சொன்னேன்.
மேலும் தமிழ்நாட்டில் எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும், கரோனா தொற்று முழுவதுமாக நீங்கி எல்லோரும் தடுப்பூசி பெற்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதற்காகத்தான் பழனி முருகனைச் சென்று வழிபட இருக்கிறேன்.
இன்று மாலை 4 மணிக்கு மீனாட்சி அம்மனைப் பார்த்துவிட்டு பழனி முருகனை தரிசிப்பதற்காகச் செல்கிறேன். வந்திருக்கிற அனைவரும் நலமாக இருக்க வேண்டும், பத்திரிகை சகோதரர்களுக்கு எப்பொழுதும்போல் எனது அன்பு வாழ்த்துகள்" எனக் கூறி விடைபெற்றார்.
இதையும் படிங்க:'தடுப்பூசி அரசியல் வேண்டாம்' - தமிழிசை