மதுரை தட்டான்குளம் பிரதான சாலை மற்றும் மேலூர் சாலையில், பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற உத்தரவிடக் கோரி, தாஹா முகமது என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பில், ”பள்ளிக்கூடம் மற்றும் குடியிருப்புப் பகுதி அருகே வைப்பதற்கு மதுபானக்கடைகள் ஒன்றும் புத்தகக் கடையோ, மளிகைக் கடையோ இல்லை. மாநிலமே மதுவில் மூழ்கியுள்ளது குறித்து அரசு கவலை கொள்வதில்லை. ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டும் தமிழக அரசு, மக்கள் நலனுக்கான பொது சுகாதாரத்திற்காக 90 ஆயிரம் கோடி செலவிடுகிறது.
தமிழகத்தில் உள்ள ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ, மூலை முடுக்குகளில் எல்லாம் மதுபானம் ஆறாக ஓடுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கும் வகையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அரசு அமல்படுத்த வேண்டும். பூரண மதுவிலக்கு என்பதை நீதிமன்றத்தின் வலியுறுத்தலாக மட்டும் பார்க்காமல், ஒட்டுமொத்த சமூகத்தின் குரலாக பார்க்க வேண்டும்.
மதுவிலக்கை அமல்படுத்தினால் குற்றங்கள் குறையும், தனிநபர் வருமானம் உயரும், குடிகாரர்களின் உடல்நிலை ஆரோக்கியம் அடையும் என்பன உள்ளிட்ட பல நேர்மறையான முன்னேற்றங்களை அடையலாம். நீதிமன்றத்தின் இந்த யோசனைகளை தமிழக அரசு உற்றுநோக்கி கவனிக்குமா” என்று நீதிபதிகள் வினவியுள்ளனர்.
மேலும், இவ்வழக்கில் பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள கடை, பிப்ரவரி 28 ஆம் தேதிக்குப் பிறகு வேறு இடத்திற்கு மாற்றப்படும் என டாஸ்மாக் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் கடை மாற்றப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: சொந்த மாவட்டத்தில் மகளிர் நலத்திட்டங்களைத் தொடங்கிய முதலமைச்சர்