மதுரை: எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு சிவகங்கை மருத்துவக் கல்லூரி அல்லது தேனி மருத்துவக் கல்லூரியை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்ற மதுரையில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அனைத்து ஆய்வுகளுக்கும் முழுமையான ஆதரவு தரவுள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில்,' கடந்த 2018 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் புதிதாக அமையவுள்ள 16 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இருப்பினும் வெளிப்புற நோயாளிகள் துறை மற்றும் எம்பிபிஎஸ் சேர்க்கைத் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை உருவாக்கி, வெளிப்புற நோயாளிகள் துறை மற்றும் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையைத் தொடங்குவதற்கான தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மனுவில் கோரியிருந்தார்.
இம்மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது ஒன்றிய அரசு தற்காலிக கட்டிடங்களில் மாணவர் சேர்க்கைக்குத் தயார் என தெரிவித்து இருந்தது.
அதேபோன்று தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசு அனைத்து நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர தயார் என தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் இம்மனு இன்று(ஜூலை 30) தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வழங்கிய அறிக்கையை, மாநில அரசின் மூத்த வழக்குரைஞர் வீரா கதிரவன் தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில், ஏற்கனவே 50 மருத்துவ மாணவர்கள் சேர்க்கையைத் தொடங்குவது குறித்து மாநில அரசு தரப்பில் இருந்து ஒன்றிய அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம், பிற மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதன் அடிப்படையில், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை தற்காலிகமாகத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு நடப்பாண்டு தேனி மருத்துவக் கல்லூரி மற்றும் சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் எய்ம்ஸ் தற்காலிக மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு வழங்க தயாராகவுள்ளது.
எனவே எய்ம்ஸ் மருத்துவக் குழு ஆய்வு செய்து, இதில் பொருத்தமான மருத்துவக் கல்லூரியை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அனைத்து நடவடிக்கைக்கும், தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: இல்லாத கண்மாயில் தடுப்பணை கட்டியதாக இணையதளத்தில் பதிவு - முறைகேடு குறித்து விசாரிக்கக்கோரி வழக்கு!