இந்திய வரலாறு என்பதே பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சி அதிகாரத்தின் கீழ்தான் தொடங்குகிறது. அதற்கு முன்பு தனித்தனி தேசங்களாக இருந்தவை வெள்ளையர்களால்தான் ஒருமித்த அடையாளத்தைப் பெறத் தொடங்குகிறது. தங்களது இரும்புக்கரங்களால் மண்ணின் மைந்தர்களை ஒடுக்கினார்கள். இதனால் விழிப்புற்ற மக்கள் ஆங்காங்கே கிளர்ந்தெழுந்து தங்களது போராட்டங்களை ஆங்கிலேயருக்கு எதிராக நடத்தத் தொடங்கினார்கள்.
அதிலும் குறிப்பாகத் தென்னிந்தியா, மாபெரும் போராட்டத்தில் பேரெழுச்சியுடன் தொடங்கி வைக்கிறது. மாமன்னர்கள் பூலித்தேவன் தொடங்கி அழகுமுத்துக்கோன், மருது சகோதரர்கள் என விடுதலைப் போராட்ட வரலாற்று நாயகர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள்.
அந்த வகையில் முதல்முதலாக வெள்ளையர்களுக்கு எதிராகப் பிரகடனமே வெளியிட்டு, அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவை மட்டுமன்றி இங்கிலாந்து தேசத்தையே நிலைகுலையச் செய்தவர்கள் மருது சகோதரர்கள். ஆனால், அவர்கள் முன்னெடுத்த வரலாற்றை அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு சேர்ப்பதில், ஒன்றிய மாநில அரசுகள் முனைப்புடன் பங்காற்றவில்லை என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
மருது பாண்டியர்கள் நிகழ்த்திய புரட்சிதான் முதல் சுதந்திரப்போர்
1971ஆம் ஆண்டு கள ஆய்வுகள் செய்து 'தென்னிந்தியப் புரட்சி' என்னும் தலைப்பிலான ஆங்கில நூலில் மருது சகோதரர்கள் குறித்த நுட்பமான பல்வேறு தகவல்களை வழங்கிய முதுமுனைவரும் வரலாற்றுப் பேராசிரியருமான ராஜய்யன் வழங்கிய சிறப்பு நேர்காணலில், “வரலாற்றின் தொடக்கத்தைத் துல்லியமாக அறியாமல் எந்தவிதமான முன்னெடுப்பையும் நம்மால் மேற்கொள்ள இயலாது.
அப்படியொரு விசயம்தான் மருது சகோதரர்கள் இங்கே சரியாகக் கொண்டு செல்லப்படாததும். இந்திய விடுதலைப்போர் 1800-1801ஆம் ஆண்டில் மருது சகோதரர்களால்தான் தொடங்கி வைக்கப்பட்டது. அவர்கள் வெளியிட்ட விடுதலைப் பிரகடனம், போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஒன்று. ஆனால், அதுகுறித்த பரவலான கவனத்தைப் பொதுத்தளத்தில் நாம் ஏற்படுத்தத் தவறிவிட்டோம். ஒன்றிய, மாநில அரசுகளும் இந்தத் தவறை தொடர்ந்து செய்கின்றன” என்கிறார்.
மேலும், “இந்தியாவில் நடைபெற்ற புரட்சிகளிலேயே மருது பாண்டியர்கள் நிகழ்த்திய புரட்சிதான் முதல் சுதந்திரப்போர் எனத் தகுந்த வரலாற்று ஆதாரங்களோடும் உரிய தரவுகளோடும் டெல்லியிலுள்ள இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்திற்கு அனுப்பு வரலாற்று அறிஞர் ராஜய்யன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, பிற மாநில மொழிகளிலும் வெளியிடத் தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தியும்” வருகிறார்.
ஆங்கிலேயர்களுக்கு விடுதலைப் பிரகடனம் வெளியிட்டார் என்பதற்காகவே கடந்த 1801ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் நாள் சிவகங்கைச் சீமையின் எல்லைக்குட்பட்ட திருப்பத்தூரில் மருதிருவர் தூக்கிலிடப்பட்டனர். மேலும், அவர்களோடு அவர்தம் பேரக்குழந்தைகள், வாரிசுகள், உறவுகள் என மொத்தம் 543 பேர் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இப்படி மருது சகோதரர்களின் வம்சாவளியையே கொலை செய்த வரலாற்றைத் திட்டமிட்டு மறக்கடித்ததுதான் அந்தப் படுகொலை.
மருதிருவரின் வரலாறு
'இந்திய விடுதலையின் முதல் மூச்சு - மாமன்னர்கள் மருதிருவர்' எனும் நூலின் ஆசிரியரும் மதுரை புரட்சிக்கவிஞர் பேரவையின் தலைவருமான தியாகு கூறுகையில், “மருது என்ற பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயர்கள் அலறித் துடித்த காலம் அது. நேருக்கு நேர் வீரத்தால் வீழ்த்த முடியாத அந்த வீரர்களைத் துரோகத்தின் பலம் கொண்டுதான் வீழ்த்தினார்கள். அன்றைக்கு மருதுவுடன் சமர்க்களம் செய்த கர்னல் அக்னியூ, தனது நூலில் இதனைத் தெளிவுபட விளக்கியுள்ளார். கொல்லப்பட்டவர்கள் போக, எஞ்சியுள்ளவர்களை பிரிட்டீஷ் அரசு மலேசியாவிலுள்ள பினாங்கு தீவுக்கு நாடு கடத்தியது.
அங்கு இளைய மருதுவின் நேரடி வாரிசான துரைசாமி, பல்லாண்டுகளுக்குப் பிறகு இதே கர்ணர் வேல்ஸ் முயற்சியின் காரணமாக விடுவிக்கப்பட்டு தமிழ்நாடு வந்தார். எல்லாவற்றையும் இழந்து மதுரையிலிருந்து பராரியாக ராமநாதபுரம் செல்ல முற்பட்டபோது மதுரை வண்டியூரில் நோய் கண்டு இறந்து போனார்.
மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் திருப்பத்தூர் கல்லறையில் இன்றைக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்களது நினைவுநாளில் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்கிறார். இது வேறு எந்த விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும் கிடைக்காத பெருமையாகும். ஆனாலும், மருதிருவரின் வரலாறு முழுவதுமாக இன்றைய தலைமுறைப் பிள்ளைகளிடம் கொண்டு செல்லப்படவில்லை. இதற்கு உடனடியாக ஒன்றிய, மாநில அரசுகள் வழி செய்ய வேண்டும்' என்கிறார்.
மகத்தான ஈகம் என்பது மண்ணுக்கானதாகவும், மக்களுக்கானதாகவும் நிகழ வேண்டும். அப்படியொரு வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களாய் மருது சகோதரர்களும், அவர்தம் வம்சாவளியினரும் இந்த மண்ணில்தான் அடிமைத்தனத்திற்கு எதிராக சமரசமின்றி போரிட்டு வாழ்ந்து மடிந்தனர். ஆனால், அவர்களை சரியாக இந்த அரசுகள் அங்கீகரித்துள்ளனவா என்றால் மிகப் பெரும் கேள்விக்குறியே எஞ்சி நிற்கிறது. இந்திய விடுதலைப் போரின் முதன்மை அடையாளமாக மருது சகோதரர்களின் புரட்சி அறிவிக்கப்படுவதே அந்த வீரர்களின் 220ஆவது நினைவுநாளில் நாம் செலுத்தும் உன்னத அஞ்சலியாக இருக்கும்.
இதையும் படிங்க: 'ஜமீன்தாரி முறை ஒழிவதற்கு வித்திட்ட ஜமீன் காளியண்ணன்'