இதுகுறித்து அவர் வழங்கிய சிறப்பு நேர்காணலில், ”திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த உலகநாதன் என்பவரும் அவருடன் சேர்ந்து 63 அகதிகளும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2009ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தனர். இவர்கள் கடந்த 1983ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை திருச்சி கொட்டப்பட்டு முகாமில் வசித்து வருகின்றனர். அவர்கள் தொடர்ந்த வழக்கில், நாங்கள் அகதிகள் அல்ல இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் என்ற அடிப்படையில் எங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என கோரியிருந்தனர்.
ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலிருந்து தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டவர்களின் வாரிசுகள். இலங்கையின் மலையகப் பகுதிகளில் வாழ்ந்த இவர்கள் கடந்த 1983ஆம் ஆண்டு நடைபெற்ற இன கலவரத்தின்போது, உயிர் பிழைக்க இந்தியாவிற்கு அகதிகளாக வந்தவர்கள்.
அந்த காலக்கட்டத்தில் உயிர் பிழைக்க ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதி முகாமில் இவர்கள் அனைவரும் தஞ்சமடைந்தார்கள். அங்கிருந்து வேலூர், கூடலூர், திருச்சி கொட்டப்பட்டு மதுரை ஆனையூர் போன்ற பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.
பூர்வீகமாய் இலங்கையை தாயகமாகக் கொண்ட மக்களுக்கும் இந்தியாவிலிருந்து மலையகத்திற்கு புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் அடிப்படையில் வேறுபாடுகள் உண்டு ஆகையால் பண்பாடு, கலாசாரம், அரசியல் சூழல் மலையகத் தமிழர்களுக்கு ஆதரவாக இல்லாத சூழலில் அந்த இனக்கலவரத்தின் போது அவர்கள் அனைவரும் இந்தியாவிற்கு புலம் பெயர்ந்தனர்.
1955ஆம் ஆண்டு இந்திய குடியுரிமைச் சட்டத்தின்படி இவர்கள் அனைவரும் இந்தியாவில் குடியுரிமை கோர தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையிலேயே இவர்களின் குடியுரிமை இதுவரை மறுக்கப்பட்டு வருகிறது. இந்திய சட்டம் அவர்களுக்கு சாதகமாக இல்லாத நிலையில் அகதிகள் குறித்த சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தும் இந்தியாவில் பின்பற்றப்படாத நிலை இருந்து வருகிறது.
இந்த சூழலில் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று வழங்கிய தீர்ப்பு அகதிகள் குறித்த விஷயத்தில் இந்தியாவின் பார்வையை கூர்மைப்படுத்தும் விதமாக வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது. இந்திய அரசின் அதிகார வரம்பிற்குள் நீதிமன்றம் தலையிட முடியாது என்ற போதிலும் உயிர்வாழும் உரிமைக்கான இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 21ன் படி தங்களுக்கான குடியுரிமையை அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு செய்ய வேண்டும். அதனை உடனடியாக தாமதப்படுத்தாமல் மத்திய அரசுக்கு மாவட்ட நிர்வாகங்கள் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இஸ்லாமிய ஆதிக்கத்தின் கீழ் பாதிக்கப்பட்ட மக்கள் பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் இருந்து வருகின்ற அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனால் இலங்கையில் அது போன்ற இஸ்லாமிய அதிகம் இல்லையென்றாலும்கூட அங்கிருந்து வருகின்ற மக்களுக்கு குடியுரிமை வழங்குவதில் முன்னுரிமை காட்டத் தவறியது துரதிர்ஷ்டவசமானது.
இங்கிருந்து ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தோட்டத் தொழிலுக்காக புலம்பெயர்ந்து சென்ற மக்களின் வாரிசுகள் தற்போது நிலவும் அரசியல் காரணங்களுக்காக மீண்டும் இந்தியாவுக்குள் வருவதை தாயகம் திரும்பியோர் என்ற அடிப்படையில் அணுகி அவர்களுக்கான குடியுரிமை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனின் உத்தரவு வரவேற்புக்குரியது.
இந்தத் தீர்ப்பு நீண்ட கால அடிப்படையில் கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமுக்கு மட்டுமன்றி பிற முகாம்களில் வாழ்கின்ற மக்களுக்கும் எடுத்துக்காட்டாக அமையக் கூடிய ஒரு தீர்ப்பாக திகழ்கிறது. இந்த வழக்கில் மதுரை மக்கள் கண்காணிப்பகம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இந்த தீர்ப்பினை பெறுவதற்காக வழக்காடி வந்திருக்கிறது. இந்த நேரத்தில் மக்கள் கண்காணிப்பகத்தின் பங்கும் பணியும் நினைவுகூரத்தக்க ஒன்றாகும்” என்றார்.