ஒவ்வொருப் பகுதியின் பண்பாட்டையும், கலாசாரத்தையும், பெருமையையும் விளக்கிச் சொல்லி அதனை உலகளாவிய பார்வைக்கு கொண்டு செல்வதில் சுற்றுலா வழிகாட்டிகளின் பங்கு அளப்பரியது. வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கும், ஆன்மிக தலங்களுக்கும் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை தங்கள் பக்கம் ஈர்த்து அந்தந்தப் பகுதியின் வரலாற்றை எடுத்துச் சொல்லி அவர்களிடம் மண்ணின் பெருமையைக் கொண்டு சேர்ப்பதில் சுற்றுலா வழிகாட்டிகள் தூதுவர்களாகவே இயங்குகின்றனர்.
கரோனா ஊரடங்கு அனைத்துதரப்பு மக்களையும் விட்டுவைக்கவில்லை. சுற்றுலா வழிகாட்டிகள் மட்டும் விதிவிலக்கா என்ன?. மார்ச் மாதம் தொடங்கி கரோனா ஊடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக பல தரப்பினர், துறையினர் மீளத் தொடங்கிவிட்டனர்.
ஆனால் சுற்றுலா இடங்கள் திறக்கப்பட்டு வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பயணிகளின் வருகையை மட்டுமே நம்பி வாழும் இவர்களின் வாழ்வாதாரம் தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. 2018ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவிற்கு வருகை மொத்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 93 லட்சத்து 67 ஆயிரத்து 424 ஆகும். அதன் மூலம் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 846 கோடி ரூபாய் அந்நியச் செலவாணியாக ஈட்டப்பட்டுள்ளது. அதேபோன்று 2017ஆம் ஆண்டு புள்ளிவிபரப்படி உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் ஒரு கோடியே 65 லட்சத்து 25 ஆயிரம் பேர்.
அதில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2018ஆம் ஆண்டில் உள்ளூர் பயணிகள் 3 ஆயிரத்து 859 லட்சம் பேரும், வெளிநாட்டுப் பயணிகள் 61 லட்சம் பேரும் வருகை தந்துள்ளனர். குறிப்பிட்டுச் சொன்னால் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ்ந்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக 5 லட்சம் சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 560 பேர். மதுரையில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளனர்.
மதுரையில் உள்ள சுற்றுலா வழிகாட்டிகள் மீனாட்சி அம்மன் கோவில், காந்தி அருங்காட்சியகம், திருமலை நாயக்கர் மஹால், அழகர் கோவில், வைகை அணை, பழமுதிர் சோலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு வரும் பயணிகளுக்கு வழிகாட்டியாக வேலை பார்த்து பணம் சாம்பாதித்து வந்தனர். தற்போது அந்தத் தொழில் ஊரடங்கில் முடங்கிவிட்டது.
இது குறித்து மதுரை மாவட்ட சுற்றுலா வழிகாட்டிகள் சங்க தலைவர் சிவகுருநாதன் தொலைபேசி வழியாக நம்மிடம் பேசியபோது, "தமிழ்நாடு அரசு தற்போது அதன்படி கடந்த 1ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கி உள்ளது. தொடர்ந்து, செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கவும், மாநிலத்திற்குள் ரயில் சேவை இயங்கவும், பயணிகள் ரயில்களை இயக்கவும் அனுமதி வழங்கி உள்ளது. இந்தத் தளர்வுகள் எங்களுக்கு பயன் அளிக்காது.
எங்களது வாழ்வாதாரம் காக்க வேண்டும் என்றால், பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் பயணிகள் வருகைக்கு அனுமதி அளிக்க வேண்டும். அதற்கு பொது போக்குவரத்து தாராளமாக்க வேண்டும். மத்திய அரசு நாடு முழுவதும் ரயில் போக்குவரத்தை உடனடியாக இயக்க முன்வர வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.
அதையடுத்து மதுரை மாவட்ட சுற்றுலா வழிகாட்டிகள் சங்கத்தின் பொருளாளரும் 'டான்சிங் கைடு' என்று அழைக்கப்படுபவருமான நாகேந்திர பிரபு ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில், "தற்போதைய தளர்வுகள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். வாழ்வாதார தேவையை கருத்தில் கொண்டு, என்னைப் போன்ற பல்வேறு வழிகாட்டிகள் அவரவர்களுக்கு தெரிந்த வேறு தொழில்களை நோக்கி செல்லத் தொடங்கி விட்டனர்.
ஆனால் இத்தொழிலை மட்டுமே நம்பியுள்ளவர்கள் என்ன செய்வார்கள். ஆகையால் தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் ரயில்வே போக்குவரத்தில் மிக விரைவாக தளர்வுகளை கொண்டு வர வேண்டும். அப்போதுதான் என்னைப் போன்ற சுற்றுலா வழிகாட்டிகளுக்கு வாழ்வாதார ரீதியான வாய்ப்பு உருவாகும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.
சுற்றுலா மூலமாக ஈட்டப்படும் வருமானம் என்பது மத்திய, மாநில அரசுகளுக்கு மிகப் பெரும் நிதியாகும். தற்போதுள்ள பொருளாதாரத்தில் இது அவசியாமான ஒன்று. அதனைக் கருத்தில் கொண்டு உரிய பாதுகாப்பு முறைகளோடு ரயில் போக்குவரத்தையும், வெளிமாநில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்து - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு