மதுரை: தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகாவைச் சேர்ந்த முத்துபாண்டி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தென்காசி மாவட்டம், சிவகிரி தாலுகா, நாராயணபுரம் கிராமத்தில் கால்நடைகள் வளர்க்கும் கொட்டகை உள்ளது. இது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படும் இது, மக்கள் பயன்பாடு இன்றி இருந்து வருகிறது.
எனவே, இதனை அகற்றி நாராயணபுரம் கிராமத்திற்கு பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க பலமுறை அலுவலர்களுக்கு மனு அளித்தோம்.
ஆனால் கால்நடை மீறல் சட்டம் 1871 இன் படி கால்நடை கொட்டகையை அகற்றக்கூடாது எனக் கூறிவிட்டனர்.
எனவே நாராயணபுரம் கிராமத்தில் உள்ள கால்நடை கொட்டகையை அகற்றி, பேருந்து நிறுத்தம் அமைக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர், சிவகிரி தாசில்தார் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.