மதுரை சிந்தாமணி சாலையில் நகர்பிள்ளைத்தோப்பு தெருவுக்கு அருகே தேநீர் கடை நடத்திவருபவர் பொன்.ராமமூர்த்தி. பழுத்த சிவ பக்தரான இவர், ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி, அமாவாசை நாள்களில் வத்திராயிருப்பிலுள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து பொன்.ராமமூர்த்தி ஈடிவி பாரத்திடம் கூறுகையில், "கரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடந்த மூன்று மாதங்களாக சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்தேன். இந்நிலையில் கடந்த பௌர்ணமி நாளில், எனது தேநீர் கடையிலுள்ள குளிர்பதனப் பெட்டிக்குள் சிவபெருமான் அமர்நாத் பனி லிங்க வடிவில் காட்சி தந்தார். கடந்த 10 நாள்களாக வெவ்வேறு வடிவத்தில் எனக்கு காட்சி அளித்து வருகிறார்.
காமதேனு லிங்கத்தில் பால் பொழிவது போன்றும்; பிள்ளையார் சகிதமாகவும்; சாய்ந்த நிலையிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காட்சியாக நான் தரிசித்து வருகிறேன்.
இதனைக் கேள்விப்பட்டு அக்கம்பக்கத்திலுள்ள அனைவரும் இந்த லிங்கத்தை வழிபட்டு வருகின்றனர். கடையின் அருகிலுள்ள ராஜ காளியம்மன் கோயில் பூசாரியும் அங்கே பூஜை முடித்து விட்டு, குளிர்பதனப் பெட்டிக்குள் இருக்கும் பனி லிங்கத்திற்கும் வழிபாடு நடத்துகிறார்" என்றார்.
இதுகுறித்து பூசாரி உமாநாத் கூறுகையில், "அடிப்படையில் ராமமூர்த்தி சிவ பக்தர் என்பதால், இந்த அரிய காட்சியை சிவபெருமான் வழங்கி இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். கடந்த 10 நாள்களாக நாள்தோறும் ராஜகாளியம்மனுக்கு பூஜைகள் வைத்துவிட்டு பனிலிங்க சிவபெருமானுக்கு பூஜை நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அமர்நாத் சென்று வழிபட நினைத்த எனக்கு, அந்த சிவபெருமான் இங்கேயே எனக்கு காட்சியளித்ததாக மனப்பூர்வமாக நம்புகிறேன்" என்கிறார்.
இதையும் படிங்க: சென்னையில் கடைகள் நாளை முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும்!