மதுரை: வைகையாற்றில் ஏவி மேம்பாலம் கீழ் பகுதியில் கட்டப்பட்ட தடுப்பணையில் இருந்து, தெப்பக்குளத்திள்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய்களையும், மதுரை தெப்பக்குளத்தில் தண்ணீர் முழுமையாக நிரம்பியுள்ளது குறித்தும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜூ ஆய்வுசெய்தார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் விசாகன், நகரப் பொறியாளர் அரசு ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய நடவடிக்கையால் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகள் காரணமாக, அனைத்து கிராம ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளிலுள்ள நீர் ஆதாரங்கள் முழுவதும் நிரம்பியுள்ளன.
பனையூர் கால்வாயில் இருந்து தெப்பக்குளத்திற்கு நீர் வரும் வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு தூய்மையான தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது தெப்பக்குளம் மூன்றாவது முறையாக நிரம்பியுள்ளது. மதுரையின் பொழுதுபோக்கு இடமாக தெப்பக்குளம் மாறியுள்ளது” என்றார்.
தொடர்ந்து எட்டுவழிச் சாலை திட்டம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட் குறித்த கேள்விக்கு, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது, மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர். பாலு ஆறு வழி சாலை திட்டத்தை செயல்படுத்தினார்.
அச்சமயம் நீர்நிலைகள், மரங்கள், மலைகள் எல்லாம் அழிக்கப்பட்டன. எதிர்கால வாகனப் போக்குவரத்தின் நலன் கருதி ஜெயலலிதா இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது அதுபோன்ற பொது நோக்கம் ஸ்டாலினுக்கு இல்லை என்றார்.
மேலும், மிதிவண்டியில் போன ஆ.ராசா தற்போது வெளிநாட்டு காரில் செல்கிறார். ஊழல்வாதிக்கு பதில் சொல்ல முடியாது, உலகெங்கும் தமிழன் பெயரை கெடுத்தவர் ராசா. எங்களை குறித்து பேச யோக்கிதையும், அருகதையும் ராசாவுக்கு இல்லை. ராசா எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. தமிழனின் மானத்தை மரியாதையை கெடுத்தவர் ஆ.ராசா என்றார் அமைச்சர் ராஜூ.
தொடர்ந்து பேசிய அவர் “வேட்டி கட்டிய தமிழனின் பெருமையை நிருபித்தவர் எடப்பாடி பழனிச்சாமி. திகார் வா வா என்பதால் ஆ.ராசா இவ்வாறு பேசுகிறார். திமுக மக்களுக்கு ஒன்றுமே செய்தது கிடையாது. ஸ்டாலினுக்கு ஒரே நோக்கம் முதலமைச்சராக வேண்டும் என்பதே” என்றார்.
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு, “ரஜினிகாந்த் முதலமைச்சராக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சுவரொட்டி ஒட்டுவதில் தவறில்லை. நடிகர் யோகிபாபுவுக்கும் கூட அவரது ரசிகர்கள் ஒட்டுகிறார்கள்” என்றார்.