ராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தைச் சேர்ந்த அஜ்மல்ஷரிபு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் பஞ்சாயத்திற்குட்பட்ட கடற்கரை பகுதியில் அணு உலைக்கு தேவையான மோனோசைட் எனப்படும் தாதுமணல் அதிகமாக உள்ளது.
இந்த மணலை கனிம வளத்துறை அனுமதியின்றி சிலர் சட்ட விரோதமாக டன் கணக்கில் அளவுக்கு அதிகமாக அள்ளி வருகின்றனர். இதனால், இயற்கை வளம் பாதிப்பதோடு, அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கடற்கரை பரப்பில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் கடல் நீர் கிராமத்திற்குள் வரவும், இயற்கை சீற்றங்கள் ஏற்படக் கூடும் .
ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சட்டவிரோதமாக தாதுமணல் அள்ளுவதை தடுக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் மனு குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், கனிமவளத்துறை இயக்குநர், கடலோர மேலாண்மை ஆணைய தலைவர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி அதிமுக ஒன்றிய கவுன்சிலர் உயிரிழப்பு!