பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றுவோர் மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், "ஊதியக்குழு பரிந்துரைப்படி நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் மற்றும் சம்பள பாக்கி எங்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் அவற்றை பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். அரசு தரப்பில், "பணி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தகுதி மற்றும் சம்பளம் உள்ளிட்டவை மாற்றியமைக்கப்பட்டது. தகுதியானவர்களுக்கு பிடித்தம் செய்யப் படாது. அவர்கள் தொடர்ந்து பணப்பலன்கள் பெறலாம். ஆனால், பலர் விசாரணை குழு முன் ஆஜராகவில்லை. இதனால், அவர்கள் குறித்து முடிவெடுக்க முடியவில்லை"எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, "தனிப்பட்ட ஒவ்வொருவரின் தகுதியையும் இந்த நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. ஒருதரப்பினருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், விசாரணை குழு முன் மார்ச் 23க்குள் ஆஜராக வேண்டும். இந்தக்குழு முடிவெடுக்கும் வரை இவர்களுக்குரிய பணப்பலன்களை பிடித்தம் செய்யக் கூடாது. பணப்பலன்கள் தொடர்பான நடவடிக்கைகள் தொழில்நுட்ப கல்வி ஆணையரின் ஒப்புதலுக்கு பிறகே அமலாவதை உறுதிபடுத்த வேண்டும்"
என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விமான நிலைய போட்டரி வாகன சேவை - இனி மெட்ரோ நிலையம் வரை...!