மதுரை: மதுரை பேரையூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞர் ரமேஷின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், பேரையூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்," எனது சகோதரர் இதயக்கனி, புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பாக புனிதாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், சாப்டூர் சார்பு ஆய்வாளர் ஜெயகண்ணன், காவலர் புதிய ராஜா ஆகியோர் தொடர்ந்து எங்கள் குடும்பத்தினரை காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரணை எனும் பெயரில் மன உளைச்சலுக்கு ஆளாக்கினர்.
இந்தநிலையில், கடந்த செப்டம்பர் 16இல் எனது இளைய சகோதரர் ரமேஷை, சார்பு ஆய்வாளர் ஜெயக்கண்ணன், காவலர் புதிய ராஜா ஆகியோர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இரவு வீடு திரும்பி விடுவார் என எதிர்பார்த்த நிலையில், அதிகாலை எங்கள் வீட்டில் இருந்து 300 அடி தொலைவில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. காவல்துறையினர் சட்டவிரோதமாக அழைத்துச் சென்று தாக்கியதன் காரணமாக, எனது சகோதரர் உயிரிழந்தார். மாலை 5.30 மணிக்கு மேலாக, அவரது உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசு 4 மணிக்கு மேல் உடற்கூறாய்வு செய்யக்கூடாது என, ஏற்கனவே விதி வகுக்கப்பட்ட நிலையில், இதுபோன்று காவல்துறையினர் நடந்தது ஏற்கத்தக்கதல்ல. எனவே எனது சகோதரர் ரமேஷின் உடலை, மதுரை, தேனி மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த மூத்த தடயவியல் துறையின் மூன்று பேராசிரியர்களை கொண்ட குழு, மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட கோரியிருந்தார்.
இவ்வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்," உடற்கூறாய்வு வீடியோ என அளிக்கப்பட்ட வீடியோ பதிவு 26 "கிளிப்பிங்ஸ்"களைக் கொண்ட ஏழு நிமிட வீடியோ மட்டுமே" என தெரிவித்தார். அதற்கு நீதிபதி," சட்ட விரோத காவல் மரணம் என புகார் அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில், முழு உடற்கூறாய்வையும் ஏன் வீடியோ பதிவு செய்யவில்லை?
தடய அறிவியல் அல்லாமல் சாதாரண மருத்துவர்களை கொண்டு உடற்கூறாய்வு செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? 20 முதல் 40 நிமிடங்கள் பயண நேரம் கொண்ட தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கோ, மதுரை அரசு ராசாசி மருத்துவமனைக்கோ கொண்டு செல்லாமல், உசிலம்பட்டி மருத்துவமனையிலேயே உடற்கூறாய்வு செய்ய வேண்டிய தேவையும், அவசரமும் என்ன? என கேள்வி எழுப்பிய நீதிபதி, இவற்றைக் கருத்தில் கொண்டு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர்கள் செல்வமுருகன், பிரசன்னா ஆகியோர் மறு உடற்கூறாய்வு செய்யவும், அதனை முழு வீடியோ பதிவு செய்ய வேண்டும்.
அப்போது தடய அறிவியல் துறை மூத்த மருத்துவர் மதிகரன் முன்னிலையில் இந்த உடற்கூறாய்வு நடைபெற வேண்டும் எனவும், மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் உடற்கூறு ஆய்வினை புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து கொள்ள அனுமதி அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து மனுதாரர் தரப்பில்,"பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வது தொடர்பாக உரிய விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறினார்.
இதைப் பதிவு செய்த நீதிபதி, இவ்வழக்கின் விசாரணையை அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.