மதுரை, கோ.புதூரைச் சேர்ந்த மணிமுத்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், “என் மனைவி சக்திகாளி, கர்ப்பமானதால்,
கோ.புதூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 14.9.2019ல் சேர்த்தேன். அங்கு செவிலியர் உள்ளிட்ட பணியாளர்கள் உரிய சிகிச்சை அளிக்கவில்லை.
அதிக ரத்தம் வடிந்த நிலையில் ஆபத்தான நிலையில் என் மனைவி இருந்தார். அங்கிருந்த துப்புரவு பணியாளர் தான் பிரசவம் பார்த்துள்ளார். தாமதமாக வந்த ஆம்புலன்ஸ் மூலம் மேல்சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், என் மனைவி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் கவனக்குறைவால்தான் என் மனைவி இறந்துள்ளார். எனவே, என் மனைவியின் உடற் கூராய்வு அறிக்கை, இறப்பு சான்றிதழ் ஆகியவற்றை வழங்கவும், என் மனைவி இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ," இந்த வழக்கில் கோ.புதூர் காவல் ஆய்வாளர் மற்றும் ராஜாஜி மருத்துவமனை பிறப்பு-இறப்பு பதிவாளர் ஆகியோர் தங்களது பணியை முறையாக மேற்கொள்ளவில்லை. காவல் ஆய்வாளரின் பதில்மனுவில் போதிய விபரங்கள் இல்லை. பொதுவாகவே குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், பதிவாளரும் இறப்பை முறையாக பதிவு செய்யவில்லை. காவல்துறையும், மருத்துவத்துறையும் 24 மணி நேரமும் பொறுப்பு கொண்ட சேவையுடன் கூடிய பணி. அரசுப் பணி என்பது நேர்மையாக மேற்கொள்ள வேண்டியது.
எனவே, ராஜாஜி மருத்துவமனையின் பிறப்பு-இறப்பு பதிவாளர் தீனதயாளன் மற்றும் கோ.புதூர் ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் மீது பணி விதிப்படி உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனுதாரர் மனைவி இறந்தது தொடர்பான வழக்கை வேறொரு அதிகாரிக்கு மாற்ற காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர், மூன்று மாதத்திற்குள் விசாரித்து உரிய நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை ஜூன் முதல் வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் தங்க புதையல்