பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய வானொலியில் வெளியாகும் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசும் போது கரோனா தொடர்பாக இந்தியா முழுவதும் தன்னார்வத்தோடு சேவை புரிந்த பல்வேறு நபர்களைக் குறிப்பிட்டார். அவர்களில் மதுரையைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி மோகனும் ஒருவர்.
இவர் அண்மையில் தன் மகளின் எதிர்காலத்திற்காக சேமித்து வைத்திருந்த ஐந்து லட்ச ரூபாயை, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி செலவளித்தார். இந்த சேவையைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி, மோகனை வெகுவாகப் பாராட்டினார்.
இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு மோகன் அளித்த சிறப்புப் பேட்டியில், "எனது சலூன் கடைக்கு வருகின்ற பல்வேறு நபர்கள் மக்கள் படுகின்ற கஷ்டத்தைச் சொல்லி வேதனைப்பட்டனர். அந்தச் சூழ்நிலையில் எனக்கும் இவர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும், எனது மகள் நேத்ராவின் எதிர்காலத்தைக் கருதி, நான் சேமித்து வைத்திருந்த ரூபாய் ஐந்து லட்சத்தை இவர்களுக்காக செலவிட, மகள் நேத்ராவே என்னிடம் கூறினார்.
பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், உயிர் போனால் திரும்ப வராது. ஆகையால், இந்தப் பணம் முழுவதையும் அவர்களுக்காக செலவு செய்வோம் என்று குடும்பத்துடன் முடிவெடுத்து அரிசி, பருப்பு, காய்கறி போன்ற பொருட்களை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினேன். தற்போதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நான் வழங்கி வருகிறேன். இதற்காக, என் வீட்டில் இருந்த சில நகைகளையும்கூட அடமானம் வைத்துள்ளேன்" என்றார்.
இதுகுறித்து மோகன் மகள் நேத்ரா கூறுகையில், "பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதைத் தவிர, இந்த நேரத்தில் வேற எதுவும் தேவையில்லை என்ற எண்ணமே எங்களுக்குத் தோன்றியது. ஆகையால், அப்பாவின் முடிவுக்கு நான் உறுதியாக இருந்தேன். என்னுடைய பள்ளியிலும் இதனை கேள்விப்பட்டு என்னையும் எனது அப்பாவையும் பாராட்டினார்கள். எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது" என்றார்.
இதையும் படிங்க; 'ஏழைகளின் வலியை விளக்க வார்த்தைகள் இல்லை' - பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்