நெல்லை மாவட்டம் கூனியூரை சேர்ந்த சுந்தரவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில்," தமிழ்நாட்டில் தற்போது வரை சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன . ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படவில்லை. குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வளர்ச்சி பணிகளை இதுவரை மேற்கொள்ளவில்லை.
ஆனால் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாத ஊதியமாக வழங்கப்படுகிறது. மேலும், இதர படிகளும் வழங்கப்படுகின்றன.
உதாரணமாக, கடந்த 2019 ஆண்டு வெளியான தகவலின்படி கடந்த ஐந்து ஆண்டுகள் வளர்ச்சி பணிக்காக, மத்திய அரசு ஒதுக்கிய 62 விழுக்காடு பணத்தை தமிழ்நாடு அரசு திருப்பி அனுப்பியுள்ளது.
எனவே, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை தங்கள் வங்கி கணக்கு இருப்பு, வங்கி பரிவர்த்தனை குறித்து இணையத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் மேற்கொண்ட மக்கள் பணிகள் குறித்து வாரம் ஒரு முறை முன்னேற்ற அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதை பொதுநல மனுவாக விசாரிக்க இயலாது என்றுகூறி நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்புப் பணிகள் - முதலமைச்சர் நாளை நாகை பயணம்!