மதுரை எல்லீஸ் நகரில் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார் ராமநாதன். இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வாகனக்கடன் தொகைக்கான ஹெச்பியை ரத்து செய்வதற்காக விண்ணப்பிக்க வந்த ராமநாதனுக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.
தங்களது வாகனத்திற்கு 100 ரூபாய் அபராதம் உள்ளதாகவும், அதனை கட்டினால் தான் தகுதிச் சான்றிதழ் தர முடியும் எனவும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர். என்னவென்று புரியாத ராமநாதன் நூறு ரூபாய்தானே என அதனைக் கட்டி ரசீதும் பெற்றுள்ளார். ரசீதில் 19/06/20 அன்று ஹெல்மெட் அணியவில்லை என, மதுரை சி5 காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஹெல்மெட் அணியவில்லை என வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது நான்கு சக்கர வாகனம் என்பதையும், மேலும், அபராதம் விதிக்கப்பட்ட நாளன்று அந்த வாகனம் மைசூரில் இருந்தது என்பதையும் கூறி ராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அலுவலர்கள் தரப்பில் பதில் ஏதும் கூறாமல் இருந்துள்ளனர். இதுபோன்ற செயல்கள் வருத்தம் அளிப்பதாகவும், இனி இதுபோன்ற நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபடக்கூடாது எனவும் ராமநாதன் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பைபாஸ் சாலையில் ரவுண்ட்ஸ்.. ரூ. 4.35 லட்சம் பறிமுதல்