மதுரை: மலர்ச்சந்தையில் மதுரை மல்லிகையின் விலை கிலோ ரூ.2,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள மதுரை மலர்ச் சந்தையில் மாவட்டத்தில் பல பகுதிகளிலிருந்தும் விளைகின்ற மலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இது தவிர திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் பூக்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகின்றன.
குறிப்பாக மதுரை மல்லிகை மட்டும் நாளொன்றுக்குச் சராசரியாக 50 டன்னுக்கும் மேலாக இங்கு விற்பனையாகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு மல்லிகை வரத்து, உற்பத்திக் குறைவின் காரணமாக ரூ.4,000 வரை விற்பனையானது. பிறகு படிப்படியாகக் குறைந்து ஓரளவிற்கு விற்பனை செய்யப்பட்டுவந்தது.
புத்தாண்டு தொடக்கமும் பூக்களின் விலையும்
இந்நிலையில் நேற்று 2021ஆம் ஆண்டின் இறுதி நாள், 2022 புத்தாண்டையொட்டி, மதுரை மல்லிகைப் பூவின் விலை கிலோ ரூ.2,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், பிச்சி ரூ.1,300-க்கும், முல்லை ரூ.1,300-க்கும், தாமரை ஒன்று ரூ.15-க்கும், பட்டன் ரோஸ் ரூ.250-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும், செண்டு மல்லி ரூ.100-க்கும், அரளி ரூ.350-க்கும் என விற்பனை செய்யப்பட்டது.
சிறு பூ வியாபாரிகளின் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், இந்த ஆண்டின் கடைசி நாளில் மதுரை மல்லிகை விலை ரூ.2,000 ஆக விற்பனை செய்யப்பட்டது. இனி அடுத்தடுத்து வரும் முகூர்த்த நாள்கள், பண்டிகை நாள்கள் காரணமாகப் பூக்களின் விலையில் ஏற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
இதையும் படிங்க: 2021 சிறந்த தமிழ் திரைப்படங்கள்!