சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் நந்தினி தமிழ்நாட்டில் டாஸ்மாக்கை ஒழிக்க பல்வேறு இடங்களில் தனது தந்தை ஆனந்தன் உடன் போராட்டம் நடத்திவருகிறார். இவர், கடந்த 2014-ஆம் ஆண்டு டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தியதால், நந்தினி மற்றும் அவரது தந்தை மீதும் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை ஜூன் 27ஆம் தேதி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நந்தினி, ஐ.பி.சி. 328-ன்படி, டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பது குற்றமில்லையா? என நீதிபதியிடம் வாதாடினார்.
இதனைத்தொடர்ந்து அவர் மீதும், அவரது தந்தை மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் கைதுசெய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை இன்று (ஜூலை 9) வரை சிறையிலடைக்க திருப்பத்தூர் நீதிமன்ற நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா உத்தரவிட்டிருந்ததால் நந்தினிக்கு ஜூலை 5ஆம் தேதி நிச்சயக்கப்பட்டிருந்த திருமணம் நின்றுபோனது.
இதற்கிடையில் தனது சகோதரியையும், தந்தையையும் விடுவிக்கக் கோரி நந்தினியின் தங்கையும், மதுரை சட்டக் கல்லூரி மாணவியுமான நிரஞ்சனா,நேற்று கல்லூரி முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார். ஆனால், போராட்டத்திற்கு தயாராகி கொண்டிருந்தபோது அவரது வீட்டிற்கு சென்ற மதுரை புதூர் காவலர்கள் நிரஞ்சனாவை கைது செய்தனர்.
இந்நிலையில் நந்தினி மற்றும் அவரது தந்தை இருவரும் பிணை கோரியிருந்த நிலையில், அவர்கள் இருவரும் இன்று திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி நந்தினையயும், அவரது தந்தையையும் தனது சொந்த பிணையில் விடுவித்தார். அதன்பின் மதுரை மத்திய சிறையில் இருந்து இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய நந்தினி, மது ஒழிப்புக்கு எதிராக போராடினால் அரசு சிறையில் அடைத்து மிரட்டி பார்க்கலாம் என நினைக்கிறது. எத்தனை தடைகள் வந்தாலும் போராட்டம் தொடரும் என்றார். மேலும் அவர் பேசுகையில், படிப்படியான மதுவிலக்கு என்பது அரசின் ஏமாற்று வேலை. திருமணம் குறித்து இரு வீட்டாரும் கலந்தாலோசித்து முடிவு எடுப்போம், குணாவும் நானும் திருமணம் செய்து கொள்வதே இருவரும் இணைந்து போராடுவதற்குத்தான் எனவும் தெரிவித்தார்.