மதுரை: மதுரை மடீசியா ஹாலில் மதுரை எக்கனாமிக் சேம்பர் நடத்தும் இரண்டாம் நாள் வர்த்தக கண்காட்சியினை ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் இணைந்து தொடங்கிவைத்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நவாஸ் கனி கூறுகையில், "ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முன்பே மக்களவையில் அதுகுறித்து பேசி இருக்கிறோம். தற்போது, கைதுசெய்யப்பட்ட உடன் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கேட்டோம். கைதுசெய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கக் கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து, அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியுள்ளோம்.
நிரந்தர தீர்வு வேண்டும்
ஒன்றிய மீன்வளத் துறை அமைச்சரை சந்தித்து பாதுகாப்பு குறித்து வலியுறுத்தியுள்ளேன். தற்போது மீனவர்கள் கைது செய்யப்படுவது புதிதல்ல, பலமுறை கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு, காரணம் ஒன்றிய அரசு இலங்கை அரசிடம் மென்மையான போக்கை கையாள்வதுதான். கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
மேலும், மீனவ சங்க பிரதிநிதிகளுடன் டெல்லியில் உள்ள ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம். ஒன்றிய அரசு இலங்கை அரசுக்கு கண்டனங்களை தெரிவித்தால் மீனவர்கள் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒன்றிய அரசின் மென்மையான போக்கினால்தான் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள்.
படகுகளை விடுவிக்க வேண்டும்
ஒன்றிய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடக்காமல் தமிழ்நாடு மீனவர்களை அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு ஒன்றிய அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். 14 நாட்டிக்கல் மைல் தூரத்தில் உள்ள கச்சத்தீவில் மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டும்.
மீனவர்களை விடுவித்தால் மட்டும் போதாது மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும். ஏனெனில், படகுகள் இல்லையெனில் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினோம்.
அதேபோல, முதலமைச்சர் கொடுத்த கடிதமும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன், தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சரை மீனவ பிரதிநிதிகள் சேர்ந்து சந்தித்து இதுகுறித்து தெரிவித்துள்ளோம்.
வெளியுறவுத்துறை அமைச்சரையும் மீனவப் பிரதிநிதிகளுடன் சந்தித்து மீனவர்கள் விடுதலை செய்வதுடன் அவர்களது படகுகளை மீட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்" என்றார்.
20 நிமிடத்தில் சட்டம்
பின்னர், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்களவையில் பெண்களுக்கான திருமண வயது 18இல் இருந்து 21 ஆக அதிகரிப்பது குறித்து எந்தவிதமான விவாதமும் நடத்தப்படவில்லை. அதற்கான குறிப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், அன்றைக்கு கொடுத்த நிகழ்ச்சி நிரலில் கூட எந்தவிதமான தகவலும் குறிப்பும் இல்லை.
இது நிலையான சட்டம் அல்ல, எதிர்ப்புகளுக்கிடையே இந்த சட்ட முன்வடிவை நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்புவது என மக்களவை முடிவு செய்துள்ளது.
ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றால் அதற்கு ஏழு நாள்களுக்கு, முன்னதாக அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். இந்த சட்ட மசோதா மதியம் 1. 40 மணிக்கு குறிப்பு வழங்கப்பட்டு, 2 மணிக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இது ஜனநாயக மரபுகளுக்கு, நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரானது.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். அது விருப்பத்தில் கேட்கப்பட்டது அல்ல. விமான நிலையத்தை பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. அதற்கான கட்டமைப்புகள் உள்ளன.
21 மாநிலங்களும் தமிழ்நாடும்
மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என தென் மாவட்டத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சரை சந்தித்து தெரிவித்தோம். ஆனால், அவர்கள் ஒரே மாநிலத்தில் மூன்று சர்வதேச விமான நிலையம் உள்ளன, வடமாநிலங்களில் சர்வதேச விமான நிலையம் ஒன்றுதான் உள்ளது என்கிறார்கள்.
முதலமைச்சர்கள் சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் என்று மக்களவையில் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். வட மாநிலங்களில் உள்ள 21 மாநிலங்கள் கொடுக்கக்கூடிய ஜிஎஸ்டி வரியை காட்டிலும் தமிழ்நாடு கொடுக்கக்கூடிய ஜிஎஸ்டி வரி அதிகம். அந்த அளவிற்கு வணிகம், கல்வி உள்ளிட்ட கட்டமைப்பின் அடிப்படையில் நாங்கள் கேட்கிறோம் என மக்களவையில் தெரிவித்தோம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: 17ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி