மதுரை சோலையழகுபுரத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் வீட்டுமனை மற்றும் வீட்டுமனை பட்டா வேண்டுவோரிடம் இருந்து மனுக்கள் பெறும் முகாமில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பங்கேற்றார். பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செல்லூர் கே. ராஜூ, "கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் உரிமை பெற்று இயங்கி வருகின்றன. முதலமைச்சரின் சிறப்பு குறை தீர் முகாம் வழியே 24 லட்சம் மனுக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளன. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கட்டப்படும் பெரியார் பேருந்து நிலைய பணிகளில் நிர்வாக சிக்கல் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அமைதியை நிலைநாட்ட தயாராக உள்ளேன் என்கிற ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன். நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது மாநிலத்தில் அமையவுள்ள 11 புதிய மருத்துவ கல்லூரியால் இங்குள்ள மாணவர்கள் பயன்பெறுவார்கள். வசதிபடைத்த மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வி ஏழை மாணவர்களுக்கு கிடைக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.