கே.கே. நகரில் உள்ள அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் இல்லம், 5 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார். இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ஆட்சியர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, " அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் மதுரை நன்றாக வளர்ந்துள்ளது. திமுக ஆட்சி காலத்தில் மதுரை மாவட்டத்தில் ரவுடிகள் மட்டுமே வளர்ந்தனர். முக.ஸ்டாலின் மதுரைக்கு வரவே பயப்பட்டார்.
மேலும், திமுக ஆட்சி காலத்தில் நடத்த முடியாத கூட்டுறவுத் தேர்தலை எங்களது ஆட்சியில் 2 முறை நடத்தியுள்ளோம். கரோனா தொற்று காலக்கட்டத்தில் வேல் யாத்திரையை பாஜக தவிர்த்திருக்கலாம். அரசியல் மற்றும் தேர்தல் நெருங்குவதால் வேல் யாத்திரை நடத்தப்படுகிறது. பீகார் தேர்தல் காரணமாக வெங்காயம் கொண்டு வர முடியவில்லை. அதனால் வெங்காய விலை உயர்ந்துள்ளது.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் எங்கள் ஊர் மருமகள். அவரிடம் தவறான செய்தியை கூறியதால் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டு சாலைகள் சரியில்லை என்று புகார் கூறியுள்ளார். விஜயகாந்த் ஓடியாடி விளையாடிய இடங்கள் அனைத்தும் தற்போது ஸ்மார்ட் சிட்டி மூலம் புனரமைக்கப்பட்டு மதுரை மாநகர் வளர்ந்துள்ளது “ என்றார்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உடனடி பணி நியமன ஆணை : நெகிழ்ச்சியில் ஆழ்த்திய முதலமைச்சர்!