மதுரை: நேற்று (மார்ச் 11) சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவருக்கு விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், 'மக்களுக்கான திட்டங்களை கடந்த இரண்டு ஆட்சிக் காலங்களிளும் செய்து வந்துள்ளேன். மதுரையின் முக்கிய தேவையான குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான திட்டங்களை கொண்டு வந்து சேர்த்துள்ளேன். 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில் புதிய திட்டம் மதுரையில் கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஒரு 40 ஆண்டுகால தண்ணீர் பிரச்சினையை தீர்க்க கூடிய திட்டமாகும். இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த முயற்சி மேற்கொள்வேன்.
மக்களுக்கான திட்டங்களைச் செய்துள்ளதால் துணிந்து மக்களைச் சந்திக்க உள்ளேன். மக்கள் நல்ல தீர்ப்பு அளிப்பார்கள், மக்கள்தான் எஜமானர்கள். ஆகவே மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பேன். மக்களின் அபிமானம் பெற்ற அமைச்சராக நான் என்றும் இருப்பேன்.
அதிமுக அரசு நல்ல ஆட்சியை கொடுத்துள்ளது. முதலமைச்சர் அறிவித்த தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு ஆறு இலவச சிலிண்டர் மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை போன்ற திட்டங்கள் பெண்களுக்கு நன்மை பயக்கக் கூடிய திட்டமாகும்.
இது பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆகவே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்றார். மேலும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்க விரைவில் பரப்புரையை தொடங்க உள்ளேன் ' என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, அதிமுக வேட்பாளர் தேர்வு குறித்து ஆங்காங்கே போராட்டம் நடைபெறுகிறது என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு, “பெரிய அரசியல் கட்சியில் இது போன்ற விஷயங்கள் எல்லாம் சகஜம் தான்” என்றார்.
இதையும் படிங்க: நிறுத்தப்பட்ட பயணிகள் ரயிலை பயன்பாட்டுக்குக் கொண்டுவரக்கோரும் மனு: தென்னக ரயில்வே பதிலளிக்க உத்தரவு!