சென்னை: எழும்பூரிலுள்ள புனித பவுல் தேவாலயத்தில் தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் சார்பில் நடந்துவரும் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “நாளை கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் நலத்திட்ட விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்கிறார். சாதி, மதம், பேதம் கடந்து மனிதநேயம் மூலம் வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
சிறுபான்மையினருக்கு எப்போதும் உறுதுணையாக திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பார்.
திமுகவிற்காக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை முதலமைச்சர் வழங்கக் கூடியவர்.
அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவை தேர்தலில், இடைதேர்தல், கழக நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளில் கலைஞர், முதலமைச்சர், போலவே உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மக்கள் பணியற்றி வருகிறார்.
அவருக்கான அங்கீகாரம் கிடைக்கும், மேலும் மக்கள் பணி சிறப்பாக நடைபெற உதயநிதி அமைச்சரவையில் இடம் பெறுவார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுரையில் எலும்பு வங்கி - திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்ரமணியன்