மதுரை: தமிழ்நாடு முழுவதுமுள்ள 50 மாவட்ட பத்திரப்பதிவு அலுவலங்களில் திங்கள்தோறும் நடைபெறவுள்ள பதிவுத் துறை சார்ந்த குறைதீர்க்கும் முகாமினை, மதுரை ஒத்தக்கடை பதிவு அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி நேற்று தொடங்கிவைத்தார். தொடர்ந்து மக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், "தமிழ்நாடு முழுவதும் வாரந்தோறும் நடைபெறும் இந்தக் குறைதீர்ப்பு முகாம்களில் அளிக்கப்படும் மனுக்கள் மீது ஒருவார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்களை மக்களின் வசதிக்கேற்ப பிரித்து கூடுதலாக 50 பத்திரப்பதிவு அலுவலங்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
பதிவுத் துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாகப் பதிவு எழுத்தர்கள், அலுவலர்களிடம் பய உணர்வு வந்துள்ளது. இதனால் போலி பதிவுகள் குறைந்துள்ளன. போலி பத்திரங்களை பதிவாளர்களே ரத்துசெய்ய அதிகாரம் வழங்கும் சட்ட முன்பதிவு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறோம்.
வட மாநிலங்களிலிருந்து சென்னை ரயில் நிலையத்திற்கு உரிய ஆவணங்களின்றி ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட 35 லாரிகளைப் பறிமுதல்செய்து அபராதம் வசூல்செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 103 ஜவுளிக்கடையில் நடத்தப்பட்ட சோதனையில் 108 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வரிப்பணத்தைக் கட்டுவதற்கு அழைப்பாணை கொடுக்கப்பட்டுள்ளது. வரி செலுத்தாதவர்கள் உரிமத்தை ரத்துசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
ஆளும் கட்சியினர் அரசு ஒப்பந்தங்களில் முறைகேடு செய்வதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்த அவர், "அவர்கள் என்ன காந்தியா? முந்தைய ஆட்சியில் அமைச்சர்கள் அலுவலர்களை வசூல்செய்யவே பயன்படுத்தினார்கள். யார் யார் என்னென்ன முறைகேடுகளில் ஈடுபட்டார்கள் என்ற விவரங்கள் ஆதாரங்களுடன் உள்ளன; வெளிப்படையாகச் சொல்லவும் நான் தயார்" என்றார்.