மதுரை: இதுதொடர்பாக காசிதர்மம் அய்யா வழி கோயில் அறக்கட்டளை சார்பில் தென்காசி முதன்மை மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், "தென்காசி மாவட்டம் காசிதர்மம் ஊராட்சியில் உள்ள அய்யா வழி கோயிலில் இடிக்கப்பட்ட சுற்றுச்சுவரை மீண்டும் கட்டித்தர வேண்டும்.
கோயில் அமைந்திருக்கும் பகுதியின் குறுக்கே செல்லும் ஊராட்சி குடிநீர் குழாயை அகற்ற வேண்டும்" என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
சாதகமான தீர்ப்பு
இந்த வழக்கில் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் யாரும் ஆஜராகாத நிலையில், அய்யா வழி கோயில் அறக்கட்டளைக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக தீர்ப்பு அளிக்கப்பட்டதாக கருதப்பட்டது.
இந்த தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி காசிதர்மம் ஊராட்சி தலைவர், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
சம்மனும் அகற்றமும்
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், "காசிதர்மம் பகுதியில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான நிலங்களும், ஊராட்சி நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பது வருவாய் ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது.
ஆதீனத்திற்கு சொந்தமாக பல ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த நிலங்களில் பலர் கட்டடம் கட்டியுள்ளனர். இது தொடர்பாக ஆதீனம் உதவியுடன் ஆய்வு நடத்தி ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், அறநிலையத்துறை இணை ஆணையர்களுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். முன்னதாக ஆதீனம் நிலங்களில் எந்த மாதிரியான ஆக்கிரமிப்பு உள்ளது? ஆக்கிரமிப்பாளர்கள் யார்? என்பதை இறுதி செய்து, அவர்களுக்கு குறிப்பிட்ட நாள்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற சம்மன் அனுப்ப வேண்டும்.
அந்த குறிப்பிட்ட நாள்களுக்குள் ஆக்கிரமிப்பு அகற்றப்படாவிட்டால், சட்டப்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திருநெல்வேலியில் அமையவிருக்கும் 'பொருநை கண்காட்சி'