மதுரை: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் அமைக்கப்பட இருப்பதாக அரசால் அறிவிக்கபட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி, தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என ஒன்றிய அரசு அறிவித்தது.
நான்காண்டு தாமதம்
ஆனால் 2018ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதிதான் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது என்ற அறிவிப்பு வெளியானது. தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது என்பதே நான்கு ஆண்டுகள் தாமதமாக அறிவிக்கபட்டது. ஆனால், தமிழ்நாட்டோடு அறிவிக்கபட்ட பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.
அமைச்சரவையைக் கூட்ட வேண்டும்
எனவே, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுவிடக் கூடாது. ஆகவே, தமிழ்நாட்டில், மதுரை தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது என ஒன்றிய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும். ஒன்றிய அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற்று, கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தத்தை விரைவுப்படுத்த வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை ஒதுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
நீதிமன்ற உத்தரவு
இந்த மனுவின் மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வந்தது. இறுதியாக, வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பினை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு இன்று (ஆக. 17) வழங்கியது.
'மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை இன்னும் 36 மாதங்களில் முழுமையாக ஒன்றிய அரசு முடித்து தரும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது' என அந்த உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸ் எப்போ வரும்? - ஷாக் கொடுத்த ஒன்றிய அரசு