உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாக்களில் சுவாமி புறப்பாட்டின்போது டங்கா மாடு, யானை போன்றவை முன்னே செல்வது வழக்கம். இதற்காக கோயிலில் பார்வதி என்ற 25 வயது நிரம்பிய பெண் யானை ஒன்று வளர்க்கப்பட்டுவருகிறது.
அந்த யானை கோயிலின் கிழக்கு ஆடி வீதியில் தனியாக அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் பராமரிக்கப்பட்டுவருகிறது. கடந்த சில மாதங்களாக பார்வதி யானையின் இடது கண் பாதிக்கப்பட்டு கண்ணில் வலி ஏற்பட்டு யானை சற்று சோர்வுடன் காணப்பட்டது.
இதனையடுத்து மருத்துவர்கள் குழு யானைக்கு அளித்த சிகிச்சையில் யானையின் இடது கண்ணில் புண் மற்றும் புரை நோய் ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கண்ணில் பார்வை சற்று மங்கி உள்ளது.
யானைக்கு கண் விழித்திரையில் பாதிக்கப்பட்டு இரவில் கண்கள் வெள்ளை நிறம் போன்று காணப்பட்டதால் கடந்த சில நாள்களாக காணொலி கலந்தாய்வு முறையில் சென்னையிலுள்ள அரசு கால்நடை மருத்துவர் மூலமாக கண் சிகிச்சை வழங்கப்பட்டு அதற்கான மருந்துகளும் அளிக்கப்பட்டுவந்தன.
இந்நிலையில் கண் மருத்துவர்கள் ஆலோசனையின் பெயரில் நேற்றைய தினம் சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடைத் துறையில் உள்ள சிறப்பு மருத்துவ உபகரணங்கள் விமானம் மூலமாக வரவழைக்கப்பட்டு அதனைப் பயன்படுத்தி மருத்துவர் சிவசங்கர், மதுரை மண்டல உதவி இயக்குநர் சரவணன் உள்ளிட்டோர் யானையின் கண்ணை பரிசோதித்து, தற்போது அளிக்கும் சிகிச்சை முறையைத் தொடருமாறு அறிவுறுத்தினர்.
இதனிடையே யானையின் மருத்துவப் பரிசோதனையின் முடிவைப் பொறுத்து தாய்லாந்து நாட்டில் யானைகளுக்கென பிரேத்யேகமாகச் செயல்படும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று மேல்சிகிச்சை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.