மதுரை விமான நிலையத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அளித்த பேட்டியில், ”டெல்லியில் இஸ்லாமியர்கள் 40க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இஸ்லாமியர்களைப் படுகொலை செய்ய வேண்டியே பாஜக கும்பல் செயல்படுகிறது. வன்முறையாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பதற்கும் காவல் துறையும் தயாராக இல்லை. வன்முறையைத் தூண்டும் விதமாக பேசிய கபில் மிஸ்ரா உள்ளிட்டவர்களை விமர்சித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அன்றைய தினமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதுபோன்ற இந்தியாவிலுள்ள அனைத்துத் துறைகளையும் அச்சுறுத்தும் வண்ணம் பாஜக அரசு செயல்பட்டுக் கொண்டு வருகிறது. டெல்லியைப் போன்று தமிழ்நாட்டிலும் வன்முறையைத் தூண்டும் விதமாக பாஜகவின் தலைவர் ஹெச். ராஜா பேசியுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் அமைதி வழியில் போராடுபவர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துவருகிறது.
'துப்பாக்கியால் ஒரு குரலை அடக்க நினைத்தால் ஓராயிரமாக வெடிக்கும்' - 'ஜிப்ஸி' பேசும் அரசியல்
தமிழ்நாட்டில் வன்முறை செய்ய வேண்டுமென்று விரும்புவர்கள் உத்தரப் பிரதேசத்துக்கோ, பிகாருக்கோ அல்லது ஹெச். ராஜாவின் சொந்த மாநிலத்திற்குச் செல்ல வேண்டுமே தவிர, இங்கு அவர்களுக்கு இடமில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாஜகவினர் நடத்திய பேரணியில் தமிழர்கள் யாரும் பங்கேற்கவில்லை; வடநாட்டவர்கள்தான் அந்தப் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.
'பிள்ளைகளை இழக்கும் வலி பிரதமருக்கு தெரியுமா' - ஷாகீன் பாக் மூதாட்டி ஆதங்கம்
டெல்லி வன்முறை காரணமாக பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியடைந்துவருகிறது. ஆகையால் இதில் வளர்ச்சி என்று ஒரு விழுக்காடு கூட கூறிவிட முடியாது. ரஜினிகாந்த்தின் குடும்பத்தினரும், அவருடைய சந்ததியினரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத் தான் நாங்கள் அனைவரும் போராடிக் கொண்டிருக்கிறோம்.
ரஜினிகாந்த் இந்தச் சட்டத்தைப் படித்து, அசாமில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது என்றறிந்து இந்தச் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். தொடர்ந்து அவர் மட்டுமல்லாமல் கமல்ஹாசனும் இது குறித்து எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யாமல் இருப்பது நல்லதல்ல. ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற வழியில் அரசியல் செய்யும் இவர்கள், மதவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கின்றனர். ஊழலை விட மிக ஆபத்தானது மதவெறி. இந்த மதவெறிதான் அனைத்திற்கும் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது என்பதைக் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.