காரைக்குடியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்திய விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்கள் மருதுசகோதரர்கள். வளரி என்னும் போர்க்கருவியை கையாள்வதில் வல்லவர்களான மருது சகோதரர்கள், காளையார்கோயில் பகுதியில் சங்கரபதி கோட்டை என்னும் கோட்டையைக் கட்டினார்கள்.
கோட்டை பயிற்சி பெற்ற இடம் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சங்கரபதி கோட்டையிலிருந்து காளையார் கோயிலுக்கு சுரங்கப்பாதை உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த சுரங்க பாதையில் 10 அடி தூரத்திற்கு சென்றபோது ஆக்சிஜன், வெளிச்சம் இல்லாத நிலையிலும் கொண்டுசென்ற காண்டா விளக்கு அணைந்தது.
இதன்மூலம் சுரங்கப்பாதைக்கு மறுமுனை இருப்பதை அறியலாம். இதேபோல காரைக்குடியிலிருந்து காளையார் கோயில் செல்லும் பகுதிக்கு இடையே அரண்மனை சிறுவயல் என்ற பகுதியிலும் மருது சகோதரர்களின் கோட்டை உள்ளது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களை இந்த கோட்டையிலேயே மருது சகோதரர்கள் சந்தித்ததாக வரலாறுகளும் உள்ளன. இந்தக் கோட்டையும் முறையாக பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
விடுதலைக்காக பாடுபட்டவர்களை போற்றும் வகையில் பிற மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் வீரர்களான மருது சகோதரர்களின் கோட்டைகளை முறையாக பராமரிக்கக் கோரி மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, காளையார்கோயில் பகுதியில் உள்ள மருது சகோதரர்களின் கோட்டைகளான சங்கரபதிகோட்டை, அரண்மனை சிறுவயல் கோட்டைகளை சீரமைத்து, முறையாக பராமரிக்கவும், பொதுமக்களின் பார்வைக்காக அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பாக நேற்று (ஜூலை 22) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் சங்கரபதி கோட்டை பராமரிப்பிற்காக சுமார் 58 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அரண்மனை சிறுவயல் கோட்டையை பொறுத்தவரை அந்த கோட்டை வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பணிகளை தொடங்க இயலாது எனக் குறிப்பிடப்பட்டது. மத்திய வனம், சுற்றுச்சூழல் துறை அமைச்சக அலுவலர்களை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கில் எதிர்மனுதாரராக சேர்ப்பதாக உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.