தமிழ் சினிமாவில் ஆயிரம் நடிகர்கள் வந்தாலும் மறைந்தாலும் சில நடிகர்களை மக்கள் என்றுமே மறந்ததில்லை, மறக்க நினைத்ததில்லை, மறக்கவும் முடிவதில்லை.
அப்படியொருவராக வந்தவர்தான் எம்.ஜி.ஆர். காலத்தால் அழியாக அந்த காவியத்தலைவனின் கலைபயணத்தில் ரசிகனாகவும், அரசியல் பயணத்தில் தொண்டனாகவும் அவருடன் மக்கள் பயணித்தார்கள்.
அந்த மக்களுக்கு எம்.ஜி.ஆர்., மீது இருவிதமான நம்பிக்கை இருந்தது. ஒன்று அவரை தேவதூதன் என நம்பினார்கள். மற்றொன்று அவரை தேவனாகவே பார்த்தார்கள். அவரும் மக்களின் கை பிடித்து அவர்களின் நாடித்துடிப்பை அறியும் கதாநாயகனாகவே என்றும் திகழ்ந்தார். அந்த நடிகரால் தொடங்கப்பட்ட இயக்கம்தான் அதிமுக.
அவருக்கு பின்னர் ஜெயலலிதா என்ற மாபெரும் ஆளுமையால் அந்த இயக்கம் தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்றது. அவரின் மறைவுக்கு பின்னர் கூச்சல், குழப்பத்துக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கைப்பற்றினார்.
மறுபக்கம் பதவி இழந்த ஓ.பன்னீர் செல்வம், தர்மயுத்தமெல்லாம் நடத்தினார். ஒருவழியாக இந்த யுத்தங்கள் முடிவுக்கு வந்தன, ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சர் ஆக்கப்பட்டார். ஆட்சியும், கட்சியும் காப்பாற்றப்பட்டது.
இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் மீண்டும் தர்ம யுத்தத்தை தொடங்கினார்கள். அவரின் சொந்தமாவட்டமான தேனியில் ஆங்காங்கே கண்ணில் படும் இடங்களிலெல்லாம், “தமிழகத்தின் நிரந்தர முதல்வரே” என்று ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக நோட்டீஸ்கள் ஓட்டப்பட்டன.
இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டின் இரண்டாம் தலைநகராக மதுரையை நிறுவ வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அரசின் அமைச்சர்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்தார்கள்.
இந்த விவகாரத்தில் பூனைக்கு யார் மணி கட்டுவார் என்றிருந்த நிலையில், திருவாய் திறந்த வருவாய்துறை அமைச்சர் உதயகுமார், “மீனாட்சி ஆட்சி நடைபெறும் மதுரையை இரண்டாம் தலைநகராக்கினால் தென்மாவட்டங்கள் வளர்ச்சி பெறும். குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் பாதி அரசு அலுவலகங்களும், காந்தி நகரில் பாதி அரசு அலுவலகங்களும் செயல்பட்டுவருகின்றன. ஆந்திராவிலும் மூன்று தலைநகரங்கள் உருவாகிவிட்டன.
மேலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையயுள்ளது. அதேபோல் துறைமுகமும் 150 கிலோ மீட்டர் தொலைவிற்குள் வருகிறது. உயர் நீதிமன்றத்தின் கிளையும் உள்ளது. ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலம் கையகப்படுத்துவதும் எளிது. ஆகவே இரண்டாவது தலைநகராக மதுரையை உருவாக்குவதே சிறந்தது” என்றார். மேலும், இது தொடர்பான தீர்மானமும் அதிமுக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் மற்றொரு அமைச்சர் செல்லூர் ராஜூ ஒருபடி மேலே சென்று, “மறைந்த முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர். மதுரையை இரண்டாம் தலைநகராக்க வேண்டும் என்று நினைத்தார்” என்றார்.
அது மட்டுமா, “மதுரையில் தமிழ் மாநாட்டை நடத்தியவர் எம்.ஜி.ஆர்., எந்த முடிவானாலும் மதுரையில் எடுப்பவர் ஜெயலலிதா” என்றார் தடாலடியாக. ஆக, மதுரையை இரண்டாம் தலைநகராக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் விரும்பம் என்பதே ராஜூவின் கூற்று.
இந்த விவகாரம் அரசியல் ரீதியாக கவனம் பெற மேலும் சில முக்கிய அம்சங்களும் உள்ளன. தமிழ்நாட்டின் தென்கோடியாக திகழும் கன்னியாகுமரியிலிருந்து தலைநகரான சென்னை 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆகவே அம்மக்களால் மாநிலத்தின் தலைநகரை கண்ணால் கூட பார்க்க கூட முடியாத சூழலே இன்னமும் உள்ளது.
இதுஒருபுறம் இருக்க, மதுரையில் தலைநகரை உருவாக்கினால் தென்மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் என்பதிலும் ஐயமில்லை. மதுரையை சுற்றிலும் திருச்சி, விருதுநகர், ராம்நாடு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளன. மற்ற தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரிக்கும் மதுரை வெகுதூரமில்லை.
1983ஆம் ஆண்டு காலத்தில் திருச்சியை தலைநகராக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விரும்பினார். அதற்காக அவர் நவுல்பட்டி என்ற ஊராட்சியை தேர்வு செய்தார். அதேபோல் எம்.ஜி.ஆர். உறையூர் பகுதியிலும் பங்களா ஒன்றையும் கட்டினார் என்கிறது மற்றொரு தகவல்.
ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் உள்ளன. அதன்படி விசாகப்பட்டினத்தில் (ஆட்சி நிர்வாகம்), அமராவதி (சட்டமன்ற தலைநகர்), கர்னூல் (சட்டம்) என செயல்படுகிறது. இதனால் வளர்ச்சி பரவலாக இருந்தாலும், வேலைகள் முடிவதில் சிக்கல் ஏற்படும் என்ற கருத்தை மறுக்கவும் முடியவில்லை. எவ்வாறாயினும் இரட்டை தலைநகர் என்பதில் பிரச்னையில்லை. மகாராஷ்டிராவில் நாக்பூர், மும்பை, கர்நாடகாவில் பெங்களூரு, பெல்காம், ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர், காஷ்மீர் என இரட்டை தலைநகரங்கள் ஏற்கனவே நாட்டில் பயன்பாட்டில் இருந்துள்ளன.
அந்த வகையில் தமிழ்நாட்டில் இரட்டை தலைநகரங்கள் தேவைப்படுகின்றன. வளர்ச்சி என்ற காரணியை பார்க்கும் போது தென் மாவட்டங்களில் வளர்சிக்கு மதுரை அல்லது திருச்சியில் இரண்டாவது தலைநகர் தேவை என்பதே பெருவாரியான மக்களின் குரலாக உள்ளது.
இந்நிலையில் தேர்தலை மனதில் வைத்து ஆளும் அதிமுக அரசு இவ்வாறு நடக்கிறது. ஓ.பன்னீர் செல்வத்தை தட்டி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதே எதிர்க்கட்சிகளின் கருத்தாக உள்ளது. எது எப்படியே அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும், அப்போதுதான் மக்களுக்கு பயன்படும்.
அந்த வகையில் தென் மாவட்ட மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது வரவேற்கதக்கதே.
மக்களின் இந்தக் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்குமா? அல்லது மக்களின் உணர்வை தூண்டி வாக்குகளாக மாற்ற பார்க்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.!
இதையும் படிங்க: இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாய்!