மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையில் அமைந்துள்ளது தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம். இங்கு பணியாற்றிவரும் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு கரோனா தீநுண்மி தொற்று உறுதியானதையடுத்து, அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டு மாநகராட்சி அலுவலர்களின் உத்தரவின்பேரில் தற்போது கிருமிநாசினி தெளிக்கப்பட்டுவருகிறது.
மேலும் அந்த அலுவலகத்தில் பணியாற்றிவந்த 20-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கரோனா தீநுண்மி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மதுரையில் கரோனா தீநுண்மி தொற்று தீவிரமடைந்துள்ளது.
இதற்கு முன்னதாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம், தீயணைப்புத் துறை, வெடிகுண்டு தடுப்பு அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கரோனா தீநுண்மி தொற்று இருந்த காரணத்தால் அந்த அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற கர்ப்பிணி கரோனாவால் உயிரிழப்பு!