மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று நேற்று மாலை சென்றது. இந்தப் பேருந்து திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது முன்னே சென்ற வாகனத்தை முந்திக்கொண்டு தவறான பாதையில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த ஷேர் ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணித்த ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த மற்றொரு முதியவரும் உயிரிழந்தார்.
மேலும் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த ஓட்டுநர் உள்ளிட்ட நான்கு பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
மேலும் படிக்க: நெல்லையில் காவல் துறை வாகனம் மோதி பெண் உயிரிழப்பு!