மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மாசி மண்டல உற்சவத்தில் தான் அதிக நாட்கள் திருவிழா நடைபெறும்.
கடந்த ஜனவரி மாதம் மாசித் திருவிழா கொடியேற்றம் நடந்தது. அன்றைய தினத்திலிருந்து விநாயகர், சுப்பிரமணியர், சந்திரசேகரர் சாமிகள் தினமும் சாமி சன்னதி 2ஆம் பிரகாரத்தில் வலம் வந்தனர்.
இதையொட்டி சாமி சன்னதி 2-ஆம் பிரகாரத்தில் 8 இடங்களில் சுற்றுக்கொடியேற்றம் இன்று காலை(பிப்.08) நடைபெற்றது.
இதையொட்டி சாமி சந்நிதி கொடிமரம் முன்பு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் எழுந்தருளினார். அப்போது சாமிக்கு சிறப்புப்பூஜை, தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் தினமும் காலை, இரவு என இரு வேளையும் மீனாட்சி சுந்தரேசுவரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள உள்ளனர்.
மேலும் கரோனா கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, சித்திரை வீதிகளில், வலம்வருவதற்குப் பதிலாக கோயிலுக்குள் உள்ள ஆடி வீதிகளில் வலம் வருவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழாவில் சட்டத்தேரில் சப்தாவர்ணசப்பரத்தில் சாமியும், அம்மனும் எழுந்தருளி சித்திரை வீதிகளை வலம் வர உள்ளனர். தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்துக்கண்ணன், கோயில் இணைஆணையர் செல்லத்துரை மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் மாசிமக பிரம்மோற்சவம் தொடக்கம்