மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவிகள் தங்கும் விடுதியில் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வலியுறுத்தி, துணைவேந்தரின் இல்லத்தை முற்றுகையிட்டு கடந்த வாரம் போராட்டம் நடத்தினர்.
இது குறித்த செய்திகள் பல்வேறு ஊடகங்களில் வெளியான நிலையில், பல்கலைக்கழக பதிவாளர் கடந்த மே 10ஆம் தேதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் ஊடகங்களிடம் கருத்தை தெரிவிப்பதற்கு பதிவாளரிடம் அனுமதி பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியைக் ஏற்படுத்தியுள்ளது. இது சட்டவிரோதம் மட்டுமின்றி ஜனநாயக மறுப்பும் கூட என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பல்கலைக் கழகத்திற்கு தொடர்புள்ள செய்திகளுக்குத்தான் அனுமதி பெற வேண்டுமே தவிர, ஒரு நாட்டின் குடிமகனாக ஊடகங்களை அணுகுவதற்கு எந்த தடையையும் விதிக்க முடியாது என்றும், பல்கலைக்கழகம் இந்த சுற்றறிக்கை பேச்சுரிமைக்கு எதிரானது என்றும் கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!