மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கடந்த 1966ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இங்கு, 77 பிரிவுகளுடன் 44 முதுகலை, 40 எம்.ஃபில், 57 முனைவர் பட்டப் படிப்புகள் உள்ளன. காமராஜர் பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் என கற்பித்தல் பணியில் 1500க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
மேலும் பல்வேறு துறைகளில் உயர் அலுவலர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். பல்கலைக்கழகத்துக்கு மாணவர்கள் கட்டணம், தொலைநிலைக்கல்வி இயக்கக மாணவர் சேர்க்கை கட்டணம் ஆகியவை பிரதான நிதி ஆதாரமாக உள்ளது. பல்கலைக்கழக மானியக்குழுவின் மூலம் திட்ட நிதியும் அவ்வப்போது வழங்கப்படுகிறது. இந்த நிதி ஆதாரங்களைக்கொண்டே பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர்கள் உள்பட ஊழியர்கள் வரை அனைவருக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது.
இத்துடன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்களுக்கும் மாதம்தோறும் ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது. இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் மட்டும் மாதம் ஒன்றுக்கு ரூ. 4 கோடியும், ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியத்துக்காக மாதம் ரூ. 4.50 கோடியும் செலவாகிறது. இதன் அடிப்படையில், ஊதியம் மற்றும் ஓய்வூதியமாக மாதம்தோறும் ரூ. 9.50 கோடி வழங்கப்படுகிறது. இதுபோக பல்கலைக்கழக நிர்வாகச் செலவினங்கள், வாகனங்களுக்கான எரிபொருள், மின் கட்டணம் என்ற வகையில் பல லட்சம் செலவாகின்றன.
இந்நிலையில், அண்மைக் காலமாக பல்கலைக்கழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்கலைக்கழகத்தின் வருவாய் ஆதாரங்கள் தடைபட்டதால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அதிகபட்சமாக இரண்டு மாதங்களுக்கு மட்டுமே பல்கலைக்கழகத்தால் ஊதியம் வழங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அங்கு பணியாற்றும் மூத்த ஊழியர்கள் கூறும்போது, "பல்கலைக்கழக மானியக்குழு பல்கலைக்கழகத்தின் எல்லைக்குட்பட்ட மாவட்டங்களில் மட்டுமே தொலைநிலைக்கல்வி மையங்கள் நடத்த வேண்டும் என்று அறிவித்ததால் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டுமே தொலைநிலைக்கல்வி மையங்கள் இயங்குகின்றன. இதில், பெரிய அளவில் வருவாய் இல்லை. பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் தொடர்ந்து நடைபெறும் முறைகேடுகளால் மாணவர் சேர்க்கையும் குறைந்து விட்டது. அரசிடம் இருந்து கிடைக்கும் நிதியும் குறைந்துள்ளது. இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு உடனடியாக தலையிட்டு நிதியுதவி வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக பல்கலைக்கழக உயர் அலுவலர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, "நிதி ஆதாரங்கள் குறைந்தததால் பல்கலைக்கழகத்துக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது குறித்து உயர்கல்வித்துறை மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட உள்ளது. எனவே, நிதி நெருக்கடி விரைவில் சரி செய்யப்படும்" என்றனர்.