மதுரை மாவட்டம், துவரிமானை சேர்ந்த மதுரேசன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ” இந்தியாவிலுள்ள சிறப்புத்திறன் (அறிவுத்திறன் குறைந்த) மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள், சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் அதிகளவில் பதக்கங்கள் பெறுகின்றனர். பதக்கம் பெறுவோருக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம்வரை ரொக்கப்பரிசாக மத்திய அரசு வழங்குகிறது. மாநில அரசு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வழங்குகிறது.
பொதுவாக, ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவோருக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.75 லட்சம்வரை விருதுகள், பரிசுகள் வழங்கப்படுகின்றன. மாநில அரசோ ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை வழங்குகிறது. ஆனால், அனைத்து வித வீரர்களையும் மத்திய, மாநில அரசுகள் சமமாக பார்ப்பதில்லை. வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிப்பதில்லை.
ஹரியானா மாநில அரசு சிறப்பு மற்றும் மாற்றுத்திறனாளி வீரர்களை அங்கீகரித்து, வேலை வாய்ப்பு, ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. அதேபோல் தமிழகத்திலும், சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும் ஒரே மாதிரி வழங்க உத்தரவிட வேண்டும் “ என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டு, அது மட்டும்தான் விளையாட்டு என்ற எண்ணத்தை இளைஞர்களிடம் செயற்கையாக ஏற்படுத்தியுள்ளதாக வேதனை தெரிவித்தனர். மனிதனின் ஆரோக்கியத்தை காத்திடும் வகையில், இந்தியாவில் கபடி, கால்பந்து, ஹாக்கி, ஓட்டம் உள்ளிட்ட பல விளையாட்டுகள் இருக்கும்போது, அனைத்து விளையாட்டுகளையும் சமமாக பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
எனவே, பிற விளையாட்டுகளுக்கும் உரிய அங்கீகாரம் வழங்குவதோடு, அனைத்து வகையான விளையாட்டு வீரர்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் கூறி, மனுக்கள் மீதான விசாரணையை அக்டோபர் 12ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: ‘கை இல்லாட்டி என்னங்க மனசுல சாதிக்க தைரியம் இருக்கு’ மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்