இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த மகாராஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “ மதுரை மாட்டுத்தாவணி நெல் வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையில், கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி அன்று அக்சயா விதை நெல்லை, 5 கிலோ பைகளாக 12 பைகள் பெற்றேன். ஆனால், அதில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது தெரிந்து, அவ்வளாகத்தில் உள்ள மற்ற 2 கடைகளில் அதே விதை நெல்லை வாங்கியபோது, அதிலும் கலப்படம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இது தொடர்பாக விற்பனையாளர்களிடம் கேட்டும் சரியான பதில் இல்லை. தொடர்ந்து விதை நெல் தயாரிப்பு நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதிலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அக்சயா விதை நெல்யை ஆய்வு செய்ய உயரதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, அக்சயா விதை நெல்லை பரிசோதிக்கவும், அதனை தயாரித்து விற்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் ” என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது வேளாண்துறை இயக்குநர் காணொலி மூலம் ஆஜராகி, குறிப்பிட்ட விதைநெல் மாதிரிகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகள் வர 3 மாத காலம் ஆகும் எனவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு குறித்து வேளாண்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: டிரைவர் இல்லாமல் செல்லும் சென்னை மெட்ரோ ரயில்!