ராஜபாளையத்தைச் சேர்ந்த ராமராஜ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில், “எங்கள் ஊர் கொல்லம் - திருமங்கலம் பிரதான சாலை வழியாக, மதுரை போன்ற பல நகரங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் எங்கள் ஊரில் ஏராளமான பஞ்சு ஆலைகளும் உள்ளன. இந்த ஆலைகளுக்கு நூற்றுக்கணக்கான சுமையேற்றும் வாகனங்கள் நகருக்குள் வந்து செல்கின்றன.
எங்கள் ஊரில் ஆங்கிலேயர் காலத்தில் சாலைகள் அமைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது அந்த சாலைகளில் குடியிருப்புகளும், மக்கள் நெருக்கமும் அதிகமாகி உள்ளதால், சாலைகள் பயணிக்க ஏதுவானதாக இல்லை. இந்த சாலைகளின் ஓரத்தில் நடப்பட்டிருந்த 57 மின் கம்பங்களும், 4 உயர் மின்மாற்றிகளும், சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வருகிறது. இவை அனைத்தும், தற்போது மின் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த மின் கம்பங்கள் சாலையோரத்தில் இருந்தது.
தற்போதைய சூழலில் இந்த மின் கம்பங்கள் அனைத்தும் சாலையின் நடுவிலுள்ளது போல் மாறி இருக்கிறது. இதனால் எங்கள் பகுதியில் தினமும் ஏராளமான சாலை விபத்துகள் நடந்து வருகின்றன. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே ஆபத்தான நிலையிலுள்ள மின் கம்பங்கள், மின்மாற்றிகளை அகற்றியும், சாலையை அகலப்படுத்தியும், சாலை போக்குவரத்திற்கு வழி செய்யும் வகையில் நெடுஞ்சாலை துறைக்கும், மின் துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட வேண்டும்” என்று அம்மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ். எஸ். சுந்தர், சரவணன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநர் நேரில் ஆஜராகி இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.