கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த ஷைன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தனது குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி அளித்தப் புகாரின் அடிப்படையில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும், தற்போது கீழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகி வரும் நிலையில், துபாயில் சென்று தனது வேலையில் மீண்டும் சேர இருப்பதால், லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், "மனுதாரரின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் விசாரணைக்கு முறையாக ஆஜராகாததால் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பின்னர் மீண்டும் மனுதாரர் முறையாக விசாரணைக்கு ஆஜராகி, கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
தலைமறைவான குற்றவாளிகளுக்குத்தான் லுக் அவுட் நோட்டீஸ்:லுக் அவுட் நோட்டீஸ் பொதுவாக தலைமறைவான குற்றவாளிகளைப் பிடிப்பதற்கான நோக்கில் பிறப்பிக்கப்படுகிறது. இந்த வழக்கைப் பொறுத்தவரை லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறிவிட்டது. ஆகவே, லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. அதேசமயம் மனுதாரர் அடுத்தடுத்த விசாரணைகளுக்கு முறையாக ஆஜராகாமல், தலைமறைவானால், மீண்டும் புதிதாக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கலாம்' என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:டெண்டர் முறைகேடு - சிக்குவாரா முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி