மதுரை: திருச்சியைச் சேர்ந்த கண்ணையன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "திருச்சி மலைக்கோட்டைப் பகுதியில் சுமார் 500 நாய்கள் சுற்றித் திரிகின்றன. சில நேரங்களில் தெரு நாய்கள் கடிக்கவும் செய்கின்றன.
தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடாத காரணத்தால், அவற்றால் கடிக்கப்படும், பொதுமக்கள் ரேபிஸ் நோய்க்கு ஆளாகின்றனர். தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அலுவலர்களுக்குப் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, கண்காணிப்புக்குழுவின்கீழ், தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தவும், கருத்தடை செய்யவும் தெரு நாய்களுக்குத் தேவையான தங்குமிடம் குடிநீர் மற்றும் உணவு வசதிகளை செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது திருச்சி மாநகராட்சி தரப்பில், "2021 ஆகஸ்ட் மாதம் முதல் 824 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், “எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு கால்நடைத்துறைச் செயலர், திருச்சி மாநகராட்சிப் பதில் மனுவாக தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணை இரண்டு வாரம் ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: மாணவர் சேர்க்கையின் பிறப்புச் சான்றிதழின்படி பெயர் பதிவு - பள்ளிக் கல்வித் துறை