திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், "2017ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞராக மூன்று ஆண்டுகளுக்கு நியமனம் செய்யப்பட்டேன்.
கரோனா தொற்று காரணமாக ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன்படி பணி நியமனம் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் முடிவடைகிறது. ஆனால், திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்களை மாற்ற அலுவலர்கள் தீவிரம் காட்டிவருகின்றனர்.
பணிக்காலம் முடிவதற்கு முன்பே ஜூன் 14ஆம் தேதி முதல் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுவருகின்றன. இது முறைகேடான செயலாகும். இது தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க இல்லை.
எனவே புதிய அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும். அத்துடன் அரசு வழக்கறிஞர் நியமன விவரங்களை இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று (ஜூலை 23) விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் வழக்குத் தொடர்பாக உள் துறை கூடுதல் தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: நீதிபதி தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்வு கோரிய வழக்கு முடித்து வைப்பு